சேலையால் தொழில் முனைவோரான பெண்கள்


சேலையால் தொழில் முனைவோரான பெண்கள்
x
தினத்தந்தி 25 April 2022 5:30 AM GMT (Updated: 2022-04-23T17:28:51+05:30)

‘சேலை வசதியான உடை இல்லை’ என இக்கால இளம்பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால் சேலையைப் போல வசதியான உடை வேறு இல்லை என்பதை இளைய தலைமுறைக்கு புரியவைக்க வேண்டுமென்பதே எங்கள் 7 பேரின் ஆசை.

‘‘சேலையைப் போல வசதியான உடை வேறு இல்லை” என்கிறார்கள் ஸ்மிதா மற்றும் அஷ்வினி. முழுவதும் பெண் ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது இவர்களின் சேலையகம். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்மிதா, கோழிக்கோட்டைச் சேர்ந்த அஷ்வினி இருவரையும் இணைத்தது சேலைதான். சென்னையில் வெற்றிகரமாக தங்களது சேலையகத்தை நடத்தி வரும் இவர்கள், அதுபற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டவை: முதலில் ஸ்மிதா பேசுகிறார்.

“தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த நான், சொந்தக் காரணங்களுக்காக அந்த வேலையில் இருந்து விலகினேன். அப்போது புதிதாக ஏதாவது செய்யவேண்டும் எனத் தோன்றியது. உடனே என் கணவரது  நெருங்கிய நண்பரின் மனைவியான அஷ்வினியின் நினைவு வந்தது. அவரைத் தொடர்பு கொண்டு “இருவரும் சேர்ந்து சேலை தொடர்பாக ஏதாவது சுயதொழில் தொடங்கலாமா?” எனக் கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவிக்கவே, உடனே அதற்கான வேலைகளில் இறங்கினோம்.

2015-ம் ஆண்டு குறைந்த முதலீட்டில் 10 சேலைகளை மட்டுமே வைத்து, ஆன்லைனில் விற்பனையை ஆரம்பித்தோம். அனைத்து சேலைகளும் உடனே விற்கவே, அந்த லாபத்தை, அடுத்தக்கட்ட தொழில் முதலீடாகப் பயன்படுத்தினோம். இவ்வாறு வெற்றிகரமாக நடந்த சேலை விற்பனையை, 2018-ம் ஆண்டு சென்னையில் நேரடி விற்பனையாக நடத்த ஆரம்பித்தோம். கடைச்சூழலில் இல்லாமல் வீடு போலவே சேலையகத்தை வடிவமைத்தோம்.

ஆர்வத்தோடு தொழிலை கற்றுக்கொள்ளும் இல்லத்தரசிகளை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தினோம். குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு, அவரவர் நேர
வசதிக்கு ஏற்றபடி தைத்துக் கொடுத்தால் போதும் என்ற சுதந்திரத்தை அவர்களுக்கு அளித்தோம். தற்போது எங்கள் குழுவில் 7 பேர் இருக்கிறோம். பெண்களுக்கு வேலைவாய்ப்பும், ஆதரவும் அளிப்பதில்,  தனிப்பட்ட திருப்தி இருக்கிறது” என்றார்.பிறகு அஷ்வினி தொடர்ந்தார்...
“நாங்கள் இருவரும் தொழில் நிமித்தமாக, தனியாக நிறைய இடங்களுக்குப் பயணிப்போம். சூரத்தில் பவர்லூம் சேலைகள், ஜார்ஜெட், க்ரேப் சேலைகள், மகாராஷ்டிராவில் சந்தேரி காட்டன் வகை சேலைகள், ராஜஸ்தானில் கோட்டா வகை சேலைகள், ஜெய்ப்பூரில் பிளாக் பிரிண்டிங் செய்யப்பட்ட சேலைகள் என ஒவ்வொரு ஊருக்கும் சென்று, அங்குள்ள சிறப்பு சேலைகளை வாங்குவோம். ஜெய்ப்பூரில் ஒரு தையல் யூனிட் அமைத்திருக்கிறோம். இவை தவிர்த்து, தனிப்பட்ட முறையில், நிறைய கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு அளித்து, அவர்கள் உற்பத்தி செய்யும் சேலைகளை வாங்கி வருகிறோம். 

‘சேலை வசதியான உடை இல்லை’ என இக்கால இளம்பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால் சேலையைப் போல  வசதியான உடை வேறு இல்லை என்பதை இளைய தலைமுறைக்கு புரியவைக்க வேண்டுமென்பதே எங்கள் 7 பேரின் ஆசை. மேற்கத்திய உடைகளைக் காட்டிலும், சேலையைப் பரவலாக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்” என்றார் அஷ்வினி. 

Next Story