இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 9 May 2022 5:30 AM GMT (Updated: 7 May 2022 8:28 AM GMT)

வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

1. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். ஆண்-பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் கல்லூரியில் படிக்கிறேன். பள்ளியில் படித்தபோதும், ஆண்களுடன் சேர்ந்து படித்த பழக்கத்தின் காரணமாக, கல்லூரியிலும் எல்லா ஆண்களிடமும் கலகலப்பாக பேசுவேன். இதை என் அப்பா தப்பாக நினைக்கிறார். நான் யாரிடமும் தவறான எண்ணத்தில் பேசுவதில்லை. இதை என்னுடைய அப்பா புரிந்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் மிகவும் வெளிப்படையாக பழகும் நபர் என்று தெரிகிறது. இருந்தாலும் உங்கள் நண்பர்கள் உங்களை எவ்வாறு நினைக்கிறார்கள் என்பதில் கவனமாக இருங்கள். வெளிப்படையாக பேசும் உங்கள் பழக்கம், அவர்களுக்கு எவ்விதமான தவறுதலான எண்ணங்களையும் ஏற்படுத்தி விடக்கூடாது. ஆண் நண்பர்களிடம் பழகுவதற்கான எல்லைகளை நிர்ணயுங்கள். உங்கள் நண்பர்களைப் பற்றி உங்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களைப் பற்றி உங்கள் தந்தைக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே உங்கள் நண்பர்களை உங்கள் தந்தைக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்களோடு பழகுவதற்கு அவருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

2. எனது மகன் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வருடம் கொரோனா பரவல் ஏற்பட்டபோது, தனக்கு தொற்று ஏற்படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். இருந்த போதும் அவருக்கு லேசான நோய் தொற்று ஏற்பட்டது. எனவே அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தினோம். ஆனால், அவர் அதிகமான பயத்தில் இருந்தார். மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்படுமோ என்று பதறினார். கொஞ்சம் கொஞ்சமாக தொற்றில் இருந்து குணமடைந்தார். ஆனாலும், அதைப் பற்றியே தொடர்ந்து யோசித்துக் கொண்டு இருந்தார். நரம்பு சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்றார். தனது எண்ணப்படியே ஆலோசனை பெற்றார். பின்பு இருதய நிபுணரை சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றார். இவ்வாறாக, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மருத்துவர்களை சந்திக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருந்தார். இதனால் அவரை மனநல நிபுணரிடம் அழைத்துச் சென்றோம். ஆனால் அவரது சிகிச்சைக்கு எனது மகன் ஒத்துழைக்கவில்லை. நாளுக்கு நாள் அவரது கோபம் அதிகமாகியது.

சமீபத்தில் கல்லூரிக்கு சென்றபோது, அவரது வகுப்பு மாணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது எடுத்துக்கொண்ட மருந்துகளைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டு, தற்போது அந்த மருந்துகளை தானும் சாப்பிட வேண்டும் என்கிறார். எனது மகனின் இந்த நிலையை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

உங்கள் மகன் கடுமையான பதற்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது. அவருக்கு மருந்துகளோடு, சரியான சிகிச்சையும் அவசியம் தேவை. இதுவரை மருந்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருப்பதால், அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது முக்கியமானது. ஒருவேளை அவர் மன நல மருத்துவரிடம் சிகிச்சைக்கு வரவில்லை என்றால், உளவியல் ஆலோசகரிடம் முதலில் அழைத்துச் செல்லுங்கள். அவர் உங்கள் மகனை சிகிச்சைக்கு செல்வதற்கான மனநிலைக்கு தயார் செய்வார்.. 




Next Story