பெண்களை அதிகம் தாக்கும் சிறுநீர் பாதைத் தொற்று


பெண்களை அதிகம் தாக்கும் சிறுநீர் பாதைத் தொற்று
x
தினத்தந்தி 1 Nov 2021 11:00 AM IST (Updated: 30 Oct 2021 4:35 PM IST)
t-max-icont-min-icon

சிறுநீர்ப் பாதைத் தொற்று என்பது பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தை முதல் நூறு வயதானவர் வரை எல்லோருக்கும் வரும் பொதுவான நோய். ஆனால், இதில் பெண்களே அதிகப் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

“சிறுநீரகத் தொற்று அதிக எரிச்சலைத் தருவதுடன், பல பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அதை சரியான முறையில் கண்டறிந்தால் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்’’ என்கிறார் திருவண்ணாமலை மாவட்டம், மேல் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் ரூபியாபானு. 

அவர் இது பற்றிக் கூறும்போது,
“சிறுநீர்ப் பாதைத் தொற்று என்பது பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தை முதல் நூறு வயதானவர் வரை எல்லோருக்கும் வரும் பொதுவான நோய். ஆனால், இதில் பெண்களே அதிகப் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் பெண் உறுப்பின் அமைப்பு. 

பெண்களின் சிறுநீர் வழி மிகவும் சிறியதாக இருப்பதால் நுண்ணுயிரிகள் சிறுநீர்ப் பாதைக்குள் மிக எளிமையாகச் சென்றுவிடும். இதனாலேயே சிறுநீர்த் தொற்று பெண்களை மிக எளிதாகத் தாக்குகிறது. ஈ-கோலை எனும் பாக்டீரியா தான் சிறுநீர்த் தொற்றை ஏற்படுத்துகிறது.


யாருக்கெல்லாம் ஏற்படும்?
 புதிதாக திருமணமாகி இல்லறத்தில் ஈடுபடும் பெண்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை ‘ஹனிமூன் சிஸ்டைட்டிஸ்’ என்பார்கள். கர்ப்பிணி களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

 நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது பாதிப்பு வரலாம்.

 நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு சிறுநீர்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

 சுகாதாரமில்லாத பொதுக் கழிப்பிடத்தைப் பயன்
படுத்தும்போதும் இந்த பிரச்சினை ஏற்படலாம்.

எப்படித் தவிர்ப்பது?
நாம் பயன்படுத்தும் கழிப்பிடத்தையும், உடலையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். சுகாதாரம் இல்லாமல் இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணியாக உள்ளது. 

இது தவிர பிறப்பிலேயே சிறுநீர்ப் பிரச்சினைகள், சிறுநீரக அடைப்பு போன்ற பாதிப்பு இருக்கும் பட்சத்தில் இந்தத் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மாதவிடாய் நின்றபிறகு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதாலும், சிறுநீர் வழியில் பாதிப்பு ஏற்பட்டுத் தொற்று ஏற்படலாம்.

அறிகுறிகள்
 சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அதிகமாக இருக்கும்.

 சூடாக சிறுநீர் செல்லும்.

 சிறுநீர் குறைவாக, அடிக்கடி கழிப்பது.

 பெண்களுக்கு அடி வயிற்றில் வலி இருக்கும்.

 காய்ச்சல், குளிர் ஏற்படும்.

 சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வரலாம்.

எப்படி உறுதி செய்வது?
சிறுநீர் பரிசோதனை, யூரின் கல்ச்சர் போன்ற சோதனைகளின் மூலம் சிறுநீர் தொற்று இருப்பதை உறுதி செய்யலாம். இதை குணப்படுத்துவதற்கு மருத்துவரின் சரியான ஆலோசனையுடன் மருந்துகள் உட்கொண்டால் போதும்.

 முறையில்லாமல் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு நேரும். கர்ப்பிணிப் பெண்களுக்கு எடை குறைவான குழந்தைபிறப்பு, குறைப்பிரசவம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

செய்ய வேண்டியவை..
 தினமும் 3 - 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 சிறுநீர்ப் பாதையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

 பொதுக் கழிப்பிடங்களை பயன்படுத்த நேர்ந்தால் சுகாதாரத்தில் கவனம் தேவை.

 நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது கூடாது.

சுகாதாரமான பழக்க வழக்கங்களுடன் மேற்சொன்ன விஷயங்களைக் கடைப்பிடித்து வந்தால் சிறுநீர் தொற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்” என்கிறார். 

Next Story