சரும வறட்சியைத் தடுக்கும் வழிகள்


சரும வறட்சியைத் தடுக்கும் வழிகள்
x
தினத்தந்தி 20 Dec 2021 5:30 AM GMT (Updated: 2021-12-18T15:25:06+05:30)

குளித்து முடித்தவுடன் சருமத்தில் மாஸ்சுரைசர் பூசுவதன் மூலம் சரும வறட்சியைத் தடுக்கலாம்.

குளிர் காலங்களில் காற்றின் ஈரப்பதம் குறைந்து, வறண்ட காற்று வீசும். இதன் காரணமாக சருமம் உலர்ந்து வறட்சி அடையும். நாம் வழக்கமாக பின்பற்றும் சரும பராமரிப்பு முறைகள், இந்த காலநிலைக்கு பயன்படாது. எனவே பனிக்காலத்துக்கு ஏற்ற சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றினால் மட்டுமே, சரும வறட்சி ஏற்படாமல் தடுக்க முடியும். இதற்கு எத்தகைய முறைகளை கையாள வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

 1. குளிக்கும் தண்ணீர் மிதமான சூடுள்ளதாக இருக்க வேண்டும். அதிக சூடுள்ள நீரில் குளிப்பதன் மூலம், இயற்கையாக சருமத்தில் இருக்கும் எண்ணெய்ப்பசை நீங்கி விடும். இதன் காரணமாக சருமம் வறட்சி அடையும்.

 2. அதிக நேரம் தண்ணீரில் நனைந்து குளிக்காமல், 10 முதல் 15 நிமிடங்கள் வரை குளிக்கலாம்.

 3.  அடர்த்தியான குளியல் சோப் பயன்படுத்தாமல், மென்மையான சோப் பயன்படுத்திக் குளிப்பது நல்லது.

 4. குளித்தவுடன் சருமத்தை அழுத்தித் துடைக்காமல், பருத்தியால் தயாரிக்கப்பட்ட துண்டைக்கொண்டு மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும்.

 5. குளித்து முடித்தவுடன் சருமத்தில் மாஸ்சுரைசர் பூசுவதன் மூலம் சரும வறட்சியைத் தடுக்கலாம்.

 6. மாஸ்சுரைசரை ‘லோஷன்’ வடிவத்தில் இல்லாமல், ‘கிரீம்’ மற்றும் ‘ஆயின்மென்ட்’ வடிவத்தில் வாங்குவது நல்லது. மேலும் ஜோஜோபா எண்ணெய், கிளிசரின், லாக்டிக் அமிலம், லனோலின், ஷியா வெண்ணெய் போன்ற பொருட்கள் கலந்த மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கும்.

 7. உதடுகளுக்கு லிப்ஸ்டிக் உபயோகிப்பதை விட, லிப் பாம் பயன்படுத்துவதே சிறந்தது. உறுத்தல் ஏற்படுத்தாத மென்மையான லிப் பாம் உபயோகிக்கலாம்.

 8. வழக்கமான சரும பராமரிப்பு பொருட்களை தவிர்த்து, சரும வறட்சியைத் தடுக்கும் வகையிலான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

 9. சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாத உடைகளை அணியலாம். மேலும் துணிகளை துவைப்பதற்கு அடர்த்தியான வேதிப்பொருட்கள் கலக்காத சோப்புகளை உபயோகிக்கலாம்.

 10. படுக்கை அறையில், காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்கும் கருவியை இயங்கச் செய்யலாம். இதன் மூலம் வறண்ட காற்றினால் சருமம் வறட்சி அடைவதை தடுக்கலாம்.

 11. சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் பேஸ் பேக்குகள் பயன்படுத்தலாம். அவற்றுக்கான குறிப்புகள் சில:
 • ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன், அரை டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்து பசை போல கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு நீரால் முகத்தைக் கழுவவும்.

 • நன்றாகப் பழுத்த பப்பாளியை மசித்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். பப்பாளி சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சுத்தப்படுத்தும்.

 • கேரட்டை பசை போல அரைத்து முகத்தில் தடவவும். 10 முதல் 20 நிமிடங்கள் கழித்து நீரால் முகத்தை கழுவவும். கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி கொண்டது. 

Next Story