நள்ளிரவில் அதிகாரிகள் அதிரடி சோதனை: தடையை மீறி வீட்டில் ஆடுகள் வெட்டப்படுவது கண்டுபிடிப்பு


நள்ளிரவில் அதிகாரிகள் அதிரடி சோதனை: தடையை மீறி வீட்டில் ஆடுகள் வெட்டப்படுவது கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 5 Jun 2017 4:30 AM IST (Updated: 5 Jun 2017 3:57 AM IST)
t-max-icont-min-icon

நள்ளிரவில் அதிகாரிகள் அதிரடி சோதனை: தடையை மீறி வீட்டில் ஆடுகள் வெட்டப்படுவது கண்டுபிடிப்பு 405 கிலோ இறைச்சி பறிமுதல்

சென்னை,

சென்னையில் தடையை மீறி வீட்டில் ஆடுகள் வெட்டப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. நள்ளிரவில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 405 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சட்டவிரோதமாக விற்பனை

சென்னையில் சைதாப்பேட்டை, பெரம்பூர் மற்றும் பேசின்பிரிட்ஜ் ஆகிய 3 இடங்களில் ஆட்டுத்தொட்டி அமைந்துள்ளன. இந்த 3 இடங்களில் மட்டும் தான் உயிரோடு கொண்டு வரப்படும் ஆடுகள் வெட்டப்பட்டு, இறைச்சிக்காக பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும். இது அல்லாது, வேறு ஏதாவது பகுதிகளில் ஆடுகள் வெட்டப்பட்டால் அது சட்டவிரோத செயல்பாடாக கருதப்படுகிறது.

இந்தநிலையில் சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் அருகே யானைக்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக ஆடுகள் அறுக்கப்படுவதாகவும், அங்கேயே ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாகவும், வெட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதாகவும் தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்தன.

405 கிலோ இறைச்சி

இந்த புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உணவு பாதுகாப்புத்துறை (சென்னை) நியமன அதிகாரி கதிரவன் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் நள்ளிரவு யானைக்குளம் பகுதியில் உள்ள அந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சட்டவிரோதமாக 29 ஆடுகள் வெட்டப்பட்டு இறைச்சிக்காக பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டு இருந்தது. மேலும் 21 ஆடுகள் வெட்டப்படுவதற்கு தயாராக இருந்தன. மேலும் ஆடுகள் வெட்டப்படும் இடம் சுகாதாரமின்றி அசுத்தமாகவும் இருந்தது. இதனைத்தொடர்ந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 29 ஆடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 405 கிலோ அளவிலான அந்த இறைச்சிகள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கிருமிநாசினி கொண்டு அழிக்கப்பட்டது.

நடவடிக்கை

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:–

ஆட்டுத்தொட்டிகள் தவிர்த்து பிற இடங்களில் ஆடுகள் வெட்டுவது தடை செய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமான செயல்பாடு ஆகும். இந்தநிலையில் யானைக்குளம் பகுதியில் உள்ள இந்த வீட்டில் நீண்ட நாட்களாக ஆடுகள் வெட்டப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் கிடைத்தன.

அதன்பேரில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த செயல்பாடு ஊர்ஜிதமாகி உள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட 405 கிலோ இறைச்சிகள் பாதுகாப்பான முறையில் கொட்டி அழிக்கப்பட்டு உள்ளன. சட்டவிரோதமாக ஆடுகளை வீடுகளில் வைத்து வெட்டி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டோர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story