ஆவடி அருகே தனியார் நிறுவன மேலாளரை தாக்கி செல்போன் பறிப்பு 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது


ஆவடி அருகே தனியார் நிறுவன மேலாளரை தாக்கி செல்போன் பறிப்பு 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2017 4:00 AM IST (Updated: 13 Jun 2017 11:53 PM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே சாலையில் நடந்து சென்ற தனியார் நிறுவன மேலாளரை தாக்கி செல்போனை பறித்துச்சென்ற 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,

ஆவடி அடுத்த காட்டூர் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 37). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அலுவலகத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த ராஜாமுகமது, சாப்பிடுவதற்காக 11 மணியளவில் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.

சாப்பிட்டு முடித்துவிட்டு, செல்போனில் பேசியபடி அலுவலகத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

வழிமறித்து தாக்கினர்

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் அவரை வழி மறித்தனர். ராஜமுகமது, அவர்களிடம் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்? என கேட்டார்.

அப்போது அந்த மர்மநபர்கள் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து ராஜாமுகமது ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

வாகன தணிக்கை

இந்நிலையில் நேற்று அதிகாலை அந்தோணி நகர் அருகே ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேரை போலீசார் மடக்கி விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அதில் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

சிறையில் அடைப்பு

விசாரணையில், அவர்கள்தான் தனியார் நிறுவன மேலாளர் ராஜா முகமதுவிடம் இருந்து செல்போனை பறித்து சென்றவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்கள் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (25), பிரேம் (20) மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story