அரசு பள்ளியில், வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்ட ஒவ்வாமையால் 46 மாணவ–மாணவிகளுக்கு திடீர் வாந்தி–மயக்கம்


அரசு பள்ளியில், வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்ட ஒவ்வாமையால் 46 மாணவ–மாணவிகளுக்கு திடீர் வாந்தி–மயக்கம்
x
தினத்தந்தி 14 Jun 2017 3:44 AM IST (Updated: 14 Jun 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

கொனகிலகட்டே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வைட்டமின் மாத்திரைகளை 46 மாணவ–மாணவிகளுக்கு திடீரென வாந்தி–மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஒவ்வாமையால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரியும், தாசில்தாரும்

சிக்கமகளூரு,

கொனகிலகட்டே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வைட்டமின் மாத்திரைகளை 46 மாணவ–மாணவிகளுக்கு திடீரென வாந்தி–மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஒவ்வாமையால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரியும், தாசில்தாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

46 மாணவ–மாணவிகள்

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா கொனகிலகட்டே கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இப்பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு வைட்டமின் மாத்திரைகளும், பாலும் கொடுக்கப்பட்டது.

அதை சாப்பிட்ட சில மாணவ–மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். சில மாணவ–மாணவிகளுக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. இவ்வாறாக 46 மாணவ–மாணவிகள் திடீர் வாந்தி–மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.

ஒவ்வாமையால் வாந்தி–மயக்கம்

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி தலைமை ஆசிரியரும், பிற ஆசிரிய–ஆசிரியைகளும் உடனடியாக மாணவ–மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தரிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டதால், மாணவ–மாணவிகளுக்கு ஒவ்வாமை(அலர்ஜி) ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர்களுக்கு வாந்தி–மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறினர்.

பின்னர் 46 மாணவ–மாணவிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் மாணவ–மாணவிகள் அனைவரும் வீடு திரும்பினர். தற்போது அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்ட மாணவ–மாணவிகளுக்கு திடீரென வாந்தி–மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரி நாகேஷ், தாசில்தார் மஞ்சேகவுடா ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story