குன்னத்தூர் அருகே மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்த வாலிபர் கைது
குன்னத்தூர் அருகே மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்த வாலிபர் கைது காதல் மனைவியின் பிரசவ செலவுக்காக கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்
குன்னத்தூர்,
குன்னத்தூர் அருகே மூதாட்டியை துண்டால் கழுத்தை இறுக்கி கொன்று நகையை கொள்ளையடித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். காதல் மனைவியின் பிரசவ செலவுக்காக மூதாட்டியை கொன்றதாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மூதாட்டிதிருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை அடுத்த ஆதியூரை சேர்ந்தவர் காளியப்பகவுண்டர். இவருடைய மனைவி பொன்னம்மாள் (வயது 82). இவர்களுக்கு மூர்த்தி, வெங்கடாசலம் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. காளியப்பகவுண்டர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவர்களுடைய மகன் மூர்த்தி கனடாவிலும், வெங்கடாசலம் சென்னையிலும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். ஆதியூரில் பொன்னம்மாள் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் தோட்டத்தில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11–ந்தேதி பொன்னம்மாளின் தோட்டத்தில் ஆட்கள் வேலை செய்தனர்.
கொலை–கொள்ளைஇரவு 7 மணி அளவில் தோட்டத்தில் வேலை செய்த பெண் ஒருவர், பொன்னம்மாளிடம் சொல்லி விட்டு, வீட்டிற்கு போகலாம் என்று பொன்னம்மாளின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பொன்னம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த குன்னத்தூர் போலீசார் விரைந்து சென்று மூதாட்டி பொன்னம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மர்ம நபர் பொன்னம்மாளை கழுத்தை இறுக்கி கொன்று, அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகை, 2 பவுன் வளையல் என 7 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர்.
வாலிபர் கைதுஇந்த நிலையில் நேற்று முன்தினம் குன்னத்தூர் அரசு ஆஸ்பத்திரி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவருடைய பெயர் தமிழரசன் (வயது 26) என்றும், அவர்தான், மூதாட்டி பொன்னம்மாளை கழுத்தை இறுக்கி கொன்று, நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து தமிழரசனை போலீசார் கைது செய்தனர்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழரசன் தனது மனைவி சுமத்திராவுடன் (25) திருவாய்முதலையூரில் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுமத்திரா குன்னத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரசவ செலவிற்கு தமிழரசனிடம் பணம் இல்லை. எனவே, தான் ஏற்கனவே வேலை செய்து வந்த மூதாட்டி பொன்னம்மாளிடம் சென்று பணத்தை கடனாக வாங்கலாம் என்று கடந்த 11–ந்தேதி பொன்னம்மாளின் வீட்டிற்கு சென்றார்.
அப்போது திடீரென்று மனம் மாறிய தமிழரசன் பொன்னம்மாளை துண்டால் கழுத்தை இறுக்கி கொன்று, அவர் அணிந்து இருந்த 7 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து தமிழரசனை போலீசார் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.