ரே‌ஷன் கடைகளில் வினியோகிக்க நடவடிக்கை: மசூர் பருப்பை கொள்முதல் செய்ய இடைக்கால தடை


ரே‌ஷன் கடைகளில் வினியோகிக்க நடவடிக்கை: மசூர் பருப்பை கொள்முதல் செய்ய இடைக்கால தடை
x
தினத்தந்தி 10 July 2017 10:45 PM GMT (Updated: 2017-07-11T01:21:35+05:30)

ரே‌ஷன் கடைகளில் வினியோகிப்பதற்காக மசூர் பருப்பை கொள்முதல் செய்வதற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

சிவகங்கை கழனிவாசலைச் சேர்ந்தவர் ஆதிஜெகநாதன். கால்நடை உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கடந்த 2006–ம் ஆண்டில் மசூர் பருப்பு மதிய உணவுத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த பருப்பை தொடர்ந்து சாப்பிட்டால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் பல்வேறு ஆய்வுகளை நடத்தியதில் மசூர் பருப்பு மற்றும் கேசரி பருப்பில் வி‌ஷத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது.

இதை சாப்பிட்டால் பல்வேறு நோய்கள் வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து வி‌ஷத்தன்மை கொண்ட மசூர் பருப்பை தமிழகத்தில் பயன்படுத்த 2007–ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பொது வினியோக திட்டத்திற்காக துவரம்பருப்பு, மசூர் பருப்பை கொள்முதல் செய்ய கடந்த 6.3.2017 அன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு, மசூர் பருப்பை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை கடந்த 26–ந்தேதி நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்கள் ரே‌ஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மசூர் பருப்பு வழங்கப்பட்டால் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அதனை கொள்முதல் செய்வது சட்ட விரோதம். எனவே பொதுவினியோக திட்டத்தின்கீழ் மசூர் பருப்பை கொள்முதல் செய்ய வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், பொதுவினியோக திட்டத்திற்கு மசூர் பருப்பை கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story