வருமான வரி சோதனை: மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
வருமான வரி சோதனையின் எதிரொலியாக மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெங்களூரு,
மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையின் எதிரொலியாக மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காங்கிரசார் ஆர்ப்பாட்டம்கர்நாடக மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள் உள்பட 64 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று இரவு வரை சோதனை நடத்தினர். இது காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்துவதாக கூறி கர்நாடக காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்கரெட்டி, மேயர் பத்மாவதி, எம்.எல்.சி.க்கள் உக்ரப்பா, ஐவான் டிசோசா, ரிஸ்வான் அர்ஷத் உள்பட பலர் கலந்து கொண்டனர். வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்துவதாக கூறி மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேசியதாவது:–
நாங்கள் பயப்பட மாட்டோம்மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு இதுவரை மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை. எப்போதும் பா.ஜனதா குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்கிறது. ‘மன் கி பாத்‘தில் தான் சாலைகள் அமைக்கப்படுகின்றன. தூய்மை இந்தியா திட்டம் அமல்படுத்தப்படுகிறது. காங்கிரசார் ஆங்கிலேயர்களின் குண்டுக்கு நெஞ்சை காட்டி போராட்டம் நடத்தியவர்கள்.
இப்போது பா.ஜனதாவினர் மத்திய போலீஸ் படையிடம் துப்பாக்கி கொடுத்து அழைத்து வந்து சோதனை நடத்துகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். ஆர்.எஸ்.எஸ். அலுவலகமான ‘கேசவ்கிருபா‘ மூலம் ஆட்சி செய்யலாம் என்று கருதினால் பா.ஜனதாவினர் ஆட்சி செய்வதை விட்டுவிட வேண்டும்.
இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் பேசினார்.
காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குகளை...போக்குவரத்து மந்திரி ராமலிங்கரெட்டி பேசுகையில், “பா.ஜனதாவினர் ஆட்சி அதிகாரத்திற்காக எதையும் செய்வார்கள். பீகாரில் மக்கள் விரும்பிய ஆட்சியை இவர்கள் மாற்றியுள்ளனர். மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன் பின்னணியில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலை டெல்லி மேல்–சபை தேர்தலில் தோற்கடிக்கும் சதி திட்டம் அடங்கியுள்ளது. வருமான வரி சோதனையை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனை நடத்தியது சரியல்ல“ என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், “வருமான வரித்துறை, சி.பி.ஐ., விசாரணை அமைப்புகளை மத்தியில் ஆளும் பா.ஜனதா தவறாக பயன்படுத்தி காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குகளை போடுகிறது. இது கண்டிக்கத்தக்கது ஆகும். மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு பின்னணியில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா ஆகியோருக்கு தொடர்பு உள்ளது“ என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.