அதிகாரிகள் திடீர் சோதனை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
புதுவையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தக்கூடாது என அரசு துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றை குப்பைத்தொட்டியில் போடாமல் கழிவுநீர் வாய்க்கால்களில் போடுவதால் அடைப்பு ஏற்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுநீர் வாய்க்கால்கள் வழியாக சென்று கடலில் கலக்கின்றன. இதனை அப்புறப்படுத்த கோடிக்கணக்கில் பணம் செலவாகிறது. இதனால் புதுவை மாநிலத்தில் பல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. எனவே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும். மேலும் அவற்றை வாய்க்கால்களில் வீசக்கூடாது என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தி இருந்தார்.
பறிமுதல்இந்த நிலையில் புதுவையில் பல கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக அரசு துறைகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை பொறியாளர் ரமேஷ், புதுவை நகராட்சி ஆணையர் கணேசன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த கடைகளில் இருந்து 6 பிளாஸ்டிக் பண்டல்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் ஆகும். பின்னர் அந்த கடையின் உரிமையாளர்களிடம், இனி மேல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.