ரே‌ஷன் கடைகளில் வினியோகம் செய்வதற்காக மசூர் பருப்பு கொள்முதல் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்


ரே‌ஷன் கடைகளில் வினியோகம் செய்வதற்காக மசூர் பருப்பு கொள்முதல் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்
x
தினத்தந்தி 12 Aug 2017 12:00 AM GMT (Updated: 11 Aug 2017 8:09 PM GMT)

ரே‌ஷன் கடைகளில் வினியோகம் செய்வதற்காக மசூர் பருப்பு கொள்முதல் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

சிவகங்கை கழனிவாசலை சேர்ந்த ஆதிஜெகநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

நான் கால்நடை உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன். ரே‌ஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிப்பதற்காக மசூர் பருப்பை கொள்முதல் செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் செய்தி வெளியானது. இந்த மசூர் பருப்பு வி‌ஷத்தன்மை வாய்ந்தது. இதை பயன்படுத்த தமிழகத்தில் 2007–ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்கள் ரே‌ஷன் கடைகளில் தான் அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் பெற்று வருகின்றன.

பல்வேறு ஆய்வுகள் நடத்தியதில் மசூர் பருப்பு மற்றும் கேசரி பருப்பில் வி‌ஷத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இந்த பருப்புகள் பொது வினியோகத்திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் 30 ஆயிரம் டன் துவரம் பருப்பு, மசூர் பருப்பை கொள்முதல் செய்ய கடந்த ஜூன் மாதம் 26–ந்தேதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த பருப்பால் உடல்நலம் பாதிக்கப்படும் என்று தெரிந்தே கொள்முதல் செய்வது சட்ட விரோதம். எனவே பொது வினியோக திட்டத்திற்கு மசூர் பருப்பை கொள்முதல் செய்ய வழிவகுக்கும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, பொதுவினியோக திட்டத்துக்காக மசூர் பருப்பை கொள்முதல் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மசூர் பருப்பு தடை செய்யப்பட்ட உணவுப்பொருள் அல்ல. நாடு முழுவதும் கிடைக்கக்கூடிய ஒரு உணவுப்பொருள் தான். மேலும் மசூர் பருப்பில் செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தக்கூடாது. கேசரி பருப்பு ஒரு சதவீதம் கூட கலந்து இருக்கக்கூடாது என்று டெண்டர் அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் இந்த மனு ஏற்கத்தக்கதல்ல. மசூர் பருப்பு கொள்முதல் தொடர்பான டெண்டருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

மசூர் பருப்பில் கேசரி பருப்பு உள்ளிட்ட எந்த கலப்படமும் இருக்கக் கூடாது. செயற்கை நிறமூட்டிகள் கலக்கக்கூடாது. கலப்படம் இல்லை என்று தரநிர்ணய பரிசோதனை செய்த பின்னர் தான் பொது வினியோக திட்டத்தில் வினியோகம் செய்ய வேண்டும். மசூர் பருப்பு கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story