பெருந்துறை அருகே பீரோவை உடைத்து நகை திருடிய 5 கொள்ளையர்கள் கைது
பெருந்துறை அருகே பீரோவை உடைத்து நகை திருடிய 5 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 12½ பவுன் நகையை மீட்டு காரையும் பறிமுதல் செய்தார்கள்.
பெருந்துறை,
பெருந்துறை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராம்பிரபு போலீசாருடன் நேற்று பெருந்துறை ஆர்.எஸ்.ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. அதனால் போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தினார்கள். காருக்குள் 5 பேர் சந்தேகப்படும் வகையில் இருந்தார்கள். மேலும் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் போலீசார் அவர்கள் 5 பேரையும் போலீஸ்நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் அருகே உள்ள கழனிகுடியை சேர்ந்த கணேசன் (49), கேரள மாநிலம் வாழையார் பாம்புப்பாறை பகுதியை சேர்ந்த எசுதாஸ் என்கிற சும்சுதீன் (33), திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முல்லை நகரை சேர்ந்த வின்செண்ட் (28), அவருடைய அண்ணன் அலேக்சாண்டர். இவர்களுடைய தாய்மாமன் திருவாரூர் முகுந்தனூரை சேர்ந்த ஆரோக்யதாஸ் (48) ஆகியோர் என்பது தெரிந்தது.
மேலும் கணேசன், ஏசுதாஸ், வின்செண்ட், அலேக்சாண்டர் ஆகியோர் சேர்ந்து கடந்த மாதம் 7–ந் தேதி பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் அன்னை கார்டன் என்ற வீட்டில் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்து 11 பவுன் நகையை கொள்ளையடித்ததும், ஆரோக்யதாஸ் வெள்ளோடு தண்ணீர்பந்தல் முருகன் நகரில் சத்தியண்ணன் என்பவர் வீட்டில் 1½ பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 12½ பவுன் நகையை மீட்டு, அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தார்கள். பின்னர் பெருந்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு ரெகைனாபர்வீன் கொள்ளையர்கள் 5 பேரையும் பெருந்துறை கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட கொள்ளையர்கள் அனைவரும் பல மாவட்டங்களில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்ட பழைய குற்றவாளிகள் என்று போலீசார் தெரிவித்தனர்.