அமித்ஷாவின் தூண்டுதலால் காங்கிரசாரை குறி வைத்து வருமான வரி சோதனை
அமித்ஷாவின் தூண்டுதலால் காங்கிரசாரை குறி வைத்து வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது என்றும், அமித்ஷாவின் தூண்டுதலால் காங்கிரசாரை குறி வைத்து வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கலபுரகி மாவட்டம் ஆலந்தாவில் மினி விதானசவுதா கட்டிடம் கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று காலையில் நடைபெற்றது. விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு மினி விதானசவுதாவுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு ஏர் கலப்பையை காங்கிரஸ் கட்சியினர் நினைவு பரிசாக அளித்தார்கள்.முன்னதாக முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியை பலப்படுத்த அமித்ஷா வந்துள்ளதாக சொல்கிறார்கள். கர்நாடகத்திற்கு அமித்ஷா வந்தாலும் சரி, பிரதமர் நரேந்திர மோடி வந்தாலும் சரி பா.ஜனதா ஆட்சிக்கு வர முடியாது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. அமித்ஷா கர்நாடகத்திற்கு வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சியினருக்கு எந்த பயமும் இல்லை. அமித்ஷா ராஜதந்திரங்கள் கர்நாடகத்தில் எடுபடாது. உத்தரபிரதேசத்தில் மட்டும் பா.ஜனதாவினர் வெற்றி பெற்றுள்ளனர்.அமித்ஷாவின் ராஜதந்திரங்கள் மணிப்பூர், கோவா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பலிக்காமல் போனது தெரியாதா?. கர்நாடகத்தில் அமித்ஷா குற்றங்களில் ஈடுபடுவது பற்றி வேண்டுமானால் திட்டம் தீட்டலாம். அவரது ராஜதந்திரங்களை இங்கு செயல்படுத்த முடியாது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மக்களுக்கு எதிராக பா.ஜனதா அரசு உள்ளது. இதனை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். பா.ஜனதாவுக்கு எதிராக நாட்டு மக்கள் திரும்பி இருக்கிறார்கள்
கர்நாடகத்தில் முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்று அமித்ஷா கூறி இருப்பதாக நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது. எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளும் ஆட்சியில் இருக்கும். வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தூண்டுதல் காரணமாக தான் காங்கிரஸ் கட்சியினரை குறி வைத்து வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.மந்திரி டி.கே.சிவக்குமார், ரமேஷ் ஜார்கிகோளி, லட்சுமி ஹெப்பால்கர், சாமனூர் சிவசங்கரப்பா உள்ளிட்ட பல உதாரணங்கள் உள்ளன. வருமான வரித்துறையினரை தூண்டிவிட்டு, காங்கிரஸ் கட்சியினரை முடக்கி விடலாம் என்று அமித்ஷா நினைக்கிறார். வருமான வரி சோதனையை கண்டு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சுவதில்லை. அந்த சோதனைகளை சட்டப்படி எதிர்கொள்வோம்.
லிங்காயத்து சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று, அந்த சமுதாயத்தினர் என்னிடம் மனு கொடுத்துள்ளனர். இதில், எனது பாத்திரம் எதுவும் இல்லை. லிங்காயத்து சமுதாயம் வேறு, வீரசைவ சமுதாயம் வேறு என்று, அந்த சமுதாயத்தினர் தான் கூறி வருகிறார்கள். ஒரு சமுதாயத்தை உடைக்கும் எண்ணம் எனக்கோ, காங்கிரஸ் கட்சியினருக்கோ கிடையாது. சாதி, மதப்பிரச்சினைகளையும், சமுதாயத்தை உடைக்கும் வேலைகளையும் பா.ஜனதாவினர் தான் செய்து வருகிறார்கள்.முதல்–மந்திரி வேட்பாளர் டி.கே.சிவக்குமார் என்று ஜனார்த்தன பூஜாரி கூறியுள்ளார். முதல்–மந்திரி யார்? என்பதை எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்யும். ஜனார்த்தன பூஜாரிக்கு முதல்–மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இல்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.