தமிழகத்தில் தேர்தல் வந்தால் அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்: அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் தேர்தல் வந்தால் அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று திருப்பூரில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
திருப்பூர்,
திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
அ.தி.மு.க. தனித்தனி அணியாக இருப்பதை மக்கள் அறுவறுப்பாக பார்க்கிறார்கள். முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக அவர்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவின் மரணம் பற்றி பேசாமல் இப்போது மர்ம மரணம் என்று பேசிக்கொண்டிருக்கிறார். அவர்களுக்குள் குழப்பம் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மக்கள் தெளிவாக உள்ளனர். தமிழகத்தில் தேர்தல் வந்தால் அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைவாக கூறி வருகிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மக்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தமிழக அரசு அவசர சட்டத்தை நிறைவேற்றிக்கொடுத்தால் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க வாய்ப்புள்ளதாக மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக அரசு கடந்த 6 மாதங்களுக்கு முன் சட்டசபையில் 2 சட்ட மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசிடம் வழங்கியது. நீட் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த சட்ட மசோதாவை அப்படியே வைத்து விட்டு தற்போது அவசர சட்டத்தை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கிறார்கள். தமிழகத்தை மத்திய அரசு மதிக்கவில்லை.
தமிழகத்தில் ஆட்சி செய்ய நடிகர்கள் தேவையில்லை. படித்த, திறமையான இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். 50 ஆண்டுகளாக சினிமா துறையை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்ததால் தான் தமிழகம் இப்போது இந்த நிலையில் உள்ளது. வேலைவாய்ப்பு, தொழில், கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் மேம்பாடு அடையவில்லை. இந்த சூழ்நிலையில் நடிகர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மீட்டெடுக்க முடியாது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தீப்பெட்டி தொழில், மோட்டார் தயாரிப்பு தொழில், பட்டாசு தயாரிப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து வரி விதிப்பை முறைப்படுத்த மனு கொடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.