நிதிநிறுவனத்தில் ரூ.600 கோடி மோசடி: 3–வது நாளாக வாடிக்கையாளர்கள் போராட்டம்
நிதி நிறுவனத்தில் ரூ.600 கோடி மோசடி செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று 3–வது நாளாக வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து போலீசார் மனுக்கள் பெற்றனர்.
களியக்காவிளை,
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மத்தம்பாலையில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வைப்புத்தொகைகளுக்கு அதிக வட்டி கொடுப்பதாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது. இதை நம்பி கேரள, குமரியை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். இதில் மொத்தம் ரூ.600 கோடி முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 4–ந் தேதி முதல் 6–ந் தேதி வரை ஓணம் பண்டிகையையொட்டி விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து 7–ந் தேதி நிதிநிறுவனம் மீண்டும் திறக்கப்பட வேண்டும். ஆனால், அந்த அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது.
மேலும், நிதி நிறுவனத்தின் வாசலில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகள் கேரள நீதிமன்றம் வாயில் விற்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு உரிய தொகை வழங்கப்படும் என அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் செல்போன்களை தொடர்பு கொண்ட போது அவை ‘சுவிட் ஆப்’ செய்யப்பட்டிருந்தன.
அதன்பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, கடந்த 7–ந் தேதி நிதிநிறுவனம் முன்பு வாடிக்கையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பளுகல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர்.
நேற்று முன்தினம் 2–வது நாளாக வாடிக்கையாளர்கள் பாறசாலை–பனச்சமூடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு தக்கலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபினவ் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் எனக்கூறினார்.
இதற்கிடையே நேற்று காலையில் 3–வது நாளாக குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனம் முன்பு குவிந்தனர். அவர்கள் தங்களது வைப்புத்தொகை திரும்ப கிடைக்காமல் இங்கிருந்து செல்வதில்லை எனக்கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் அங்கு கூடியதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பளுகல், பாறசாலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், வாடிக்கையாளர்களிடம் பணம் திரும்ப கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அத்துடன், நிதிநிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரிக்க தொடங்கினர்.
இதற்காக, அங்கு கூடி நின்றவர்களை அருகில் இருந்த அரசு பள்ளி வளாகத்திற்கு வரவழைத்து அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர். இதற்கிடையே சம்பவ இடத்தில் பாறசாலை எம்.எல்.ஏ. ஹரிசந்திரன் வந்தார். அவர் வாடிக்கையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பணம் மோசடியில் ஈடுபட்ட நிதிநிறுவனத்தின் உரிமையாளர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவர் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க விமான நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.