மகன்–மகள் உள்பட 4 பேர் கொலை: முன்னாள் வங்கி மேலாளரின் தூக்கு தண்டனை உறுதி


மகன்–மகள் உள்பட 4 பேர் கொலை: முன்னாள் வங்கி மேலாளரின் தூக்கு தண்டனை உறுதி
x
தினத்தந்தி 23 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-24T03:45:05+05:30)

மாமியார், மைத்துனி, மகன், மகளை கொன்ற வழக்கில் முன்னாள் வங்கி மேலாளரின் தூக்கு தண்டனையை உறுதி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் அருகே பானஜி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் நாயக். இவர் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சுந்தரி. கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு புவன்(10) என்ற மகனும், கீர்த்திகா(3) என்ற மகளும் இருந்தனர்.

இந்த நிலையில் சுந்தரியின் தங்கை சவிதாவுக்கு, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரமேஷ் நாயக் பணி வாங்கி கொடுத்தார். அந்த நிறுவனத்தில் பணி செய்தபோது தன்னுடன் பணியாற்றும் ஒருவரை சவிதா திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு ரமேஷ் நாயக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக கடந்த 2010–ம் ஆண்டு ஜூன் மாதம் 15–ந் தேதி துமகூருவில் உள்ள வீட்டில் வைத்து சவிதா, சவிதாவின் தாயார் சரஸ்வதி ஆகியோருடன் ரமேஷ் நாயக் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சவிதாவின் திருமண வி‌ஷயத்தில் தலையிட வேண்டாம் என அவரிடம் சரஸ்வதி கூறியுள்ளார்.

இதனால், கோபமடைந்த ரமேஷ் நாயக், தனது மாமியார் சரஸ்வதி, மைத்துனி சவிதா ஆகியோரை கொன்று தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் உடலை வீசினார். இந்த கொலையை தன்னுடன் இருந்த தனது மகன் மற்றும் மகள் ஆகிய 2 பேரும் பார்த்ததாக கருதிய ரமேஷ் நாயக், அவர்கள் 2 பேரையும் மறுநாளே பானஜி குளத்தில் தள்ளி கொலை செய்தார். இந்த 4 கொலைகள் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேஷ் நாயக்கை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த கீழ்கோர்ட்டு 4 பேரை கொலை செய்த ரமேஷ் நாயக்கிற்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3–ந் தேதி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ரமேஷ் நாயக் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஐகோர்ட்டு நீதிபதிகள் ரவி மாலிமத் மற்றும் ஜான் மைக்கேல் குன்கா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது.

அப்போது, அரசு தரப்பு வக்கீலும், ரமேஷ் நாயக் தரப்பு வக்கீலும் தங்களது வாதங்களை எடுத்துரைத்தனர். வாதங்களை கேட்ட நீதிபதிகள், ரமேஷ் நாயக்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து அதிரடியாக உத்தரவிட்டனர். தூக்கு தண்டனையை, நீதிபதிகள் உறுதி செய்ததை கேட்டு முன்னாள் வங்கி மேலாளர் ரமேஷ் நாயக் கதறி அழுதார்.


Next Story