வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானங்களில் கடத்தி வந்த தங்கம் பறிமுதல்
வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானங்களில் கடத்தி வந்த ரூ.2.30 கோடி தங்கம் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜோர்டான் நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பெங்களூரு,
துபாயில் இருந்து நேற்று பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு தனியார் விமானம் வந்து இறங்கியது. விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது, ஜோர்டான் நாட்டை சேர்ந்த அப்துல் ரகுமான் ரிசாக் அல் தர்தாசாவி (வயது 38) என்பவரும், அதே நாட்டை சேர்ந்த தலால் யூசப் எச்சல்லா (38) என்பவரும் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 6½ கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கம் கடத்தும் கும்பல் 2 பேருக்கும் இலவசமாக டிக்கெட்டுகள் எடுத்து கொடுத்து தங்கம் கடத்தலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதேபோல், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வந்ததாக முனிசாமி பொன்னையா என்பவரையும், துபாயில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வந்ததாக கேரளாவை சேர்ந்த நவுசாத் (37) என்பவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் கடத்தி வந்த தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான 4 பேர்களிடம் இருந்து மொத்தம் 7½ கிலோ தங்ககட்டிகள் பறிமுதல் செய்ததாகவும், இதன் மதிப்பு ரூ.2.30 கோடி இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.