மோசடி வழக்கு: விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி வழக்கு: விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு.
மதுரை,
தனியார் வங்கி ஒன்றின் உதவி துணை தலைவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள குடோன்களில் உளுந்து இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதன்பேரில் அடமான கடன் கேட்டும் சிலர் எங்களது வங்கியின் மதுரை, விருதுநகர் கிளைகளில் விண்ணப்பித்தனர். இதனையடுத்து அவர்களுக்கு ரூ.80 கோடி வரை கடன் வழங்கப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட குடோன்களில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த குடோன்களில் உளுந்தம் பருப்பு குறைவாகவும், உளுந்து உமி அதிக அளவிலும் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து மோசடியான தகவல் கொடுத்து கடன் பெற்றதாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விருதுநகர், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தோம். போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் போலீசார் இந்த மோசடி குறித்து விசாரணை செய்வதில் தாமதப்படுத்தி வருகின்றனர். எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இன்று நேரில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.