ஜெயலலிதா வீட்டில் வருமானவரி சோதனை நடந்த விவகாரத்தில் முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சருக்கு தொடர்பு இல்லை


ஜெயலலிதா வீட்டில் வருமானவரி சோதனை நடந்த விவகாரத்தில் முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சருக்கு தொடர்பு இல்லை
x
தினத்தந்தி 19 Nov 2017 4:15 AM IST (Updated: 19 Nov 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய விவகாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி–கொடைக்கானல் சாலையில் வரதமாநதி அணை அமைந்துள்ளது. இதன் மொத்த உயரம் 65 அடி ஆகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக அணை நிரம்பி வழிந்தது. தற்போது அணையில் 61 அடி வரை தண்ணீர் உள்ளது.

ஆயக்குடி பாப்பன் வாய்க்கால், பெரிய வாய்க்கால் மற்றும் பழனி வாய்க்கால் ஆகியவற்றுக்கு அணையில் இருந்தே தண்ணீர் வரும். இதன் மூலம் விவசாய பாசனத்துக்கும் தண்ணீர் கிடைக்கும். எனவே அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் சார்பில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக தினசரி 20 கன அடி வீதம் 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்–அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு, மலர் தூவி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது வழக்கமான நடைமுறையே ஆகும். வருமான வரித்துறையினர் அவர்களின் கடமையை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கோ, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கோ எந்த சம்பந்தமும் இல்லை.

பழனி–கொடைக்கானல் சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவை குடியிருப்பு பகுதிக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். கொடைக்கானல் சாலையில் பெரியஒட்டுக்குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாக புகார் வந்துள்ளது. அந்த இடங்களை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story