போயஸ் கார்டன் இல்லத்தில் வருமானவரித்துறை சோதனை: ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சரத்குமார் பேட்டி
‘போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’ என்று கோவையில் சரத்குமார் கூறினார்.
கோவை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் மாநில துணை செயலாளர் சண்முக சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– சமீப காலமாக தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை அதிக இடங்களில் நடக்கிறது. வருமான வரித்துறையினர் அவர்களின் பணியை செய்கின்றனர்.
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இது அந்த கட்சியின் உண்மை தொண்டர்களுக்கும், அவர் மீது பற்று கொண்டவர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தொண்டர்கள் கடும் மனவேதனை அடைந்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.