ராயபுரத்தில் பேனர் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் கைது


ராயபுரத்தில் பேனர் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2017 4:45 AM IST (Updated: 23 Nov 2017 3:59 AM IST)
t-max-icont-min-icon

பேனர் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சினிமா புதுமுக நடிகரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவருடைய அண்ணனை தேடி வருகின்றனர்.

ராயபுரம்,

சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 21). இவர், ராயபுரம் எம்.எஸ்.கோவில் தெருவில் விளம்பர பேனர் தயாரிக்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் இவரது கடைக்கு ராயபுரம் ஆண்டியப்பன் முதலி தெருவில் வசிக்கும் நிரஞ்சன் (32), அவருடைய அண்ணன் லெனின் (35) ஆகியோர் வந்தனர்.

‘நீ தான் ராஜா’ என்ற படத்தில் நிரஞ்சன், கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த படத்துக்கான விளம்பர பேனர் தயாரிக்க சாகுல் அமீதுவிடம் ஆர்டர் கொடுத்தனர். அதன்படி சாகுல் அமீது ரூ.5,600–க்கு பேனர் தயாரித்து வழங்கினார்.

அப்போது அவர்கள், ‘நீ தான் ராஜா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாகவும், படம் வெளிவந்ததும் இதற்கான பணத்தை தருவதாகவும் உறுதி அளித்தனர். அதை சாகுல் அமீதும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் மீண்டும் நிரஞ்சன், அவருடைய அண்ணன் லெனின் இருவரும் பேனர் தயாரித்து தருமாறு சாகுல் அமீதுவிடம் கேட்டனர். அதற்கு சாகுல் அமீது, ஏற்கனவே தயாரித்து கொடுத்த பேனருக்கு பணம் தரவில்லையே என்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த புதுமுக நடிகர் நிரஞ்சன், அவருடைய அண்ணன் லெனின் இருவரும் சேர்ந்து பேனர் கடை உரிமையாளர் சாகுல் அமீதுவை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சாகுல் அமீது கொடுத்த புகாரின் பேரில், ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிரஞ்சனை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். பலமுறை அழைத்தும் அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் நேற்று ராயபுரம் பகுதிக்கு வந்த நடிகர் நிரஞ்சனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவருடைய அண்ணன் லெனினை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story