மாடியில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை: பெற்றோர் திருமணம் நிச்சயித்ததால் உயிரை மாய்த்தார்


மாடியில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை: பெற்றோர் திருமணம் நிச்சயித்ததால் உயிரை மாய்த்தார்
x
தினத்தந்தி 23 Nov 2017 9:09 PM GMT (Updated: 2017-11-24T02:39:08+05:30)

பெங்களூருவில், 10–வது மாடியில் இருந்து குதித்து கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்ததில், பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் நிச்சயித்ததால் அவர் உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில், 10–வது மாடியில் இருந்து குதித்து கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்ததில், பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் நிச்சயித்ததால் அவர் உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்துள்ளது.

பெண் என்ஜினீயர் தற்கொலை

கோவா மாநிலத்தை சேர்ந்தவர் கீதாஞ்சலி(வயது 27). கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர், பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே காடுபீசனஹள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பெல்லந்தூர் அருகே வாடகை வீட்டில் தனது சகோதரர் பிரசுல்குமாருடன், கீதாஞ்சலி தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் தான் வேலை செய்யும் தனியார் நிறுவனத்தின் 10–வது மாடியில் இருந்து குதித்து கீதாஞ்சலி தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை கைப்பற்றி மாரத்தஹள்ளி போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது முதலில் தெரியாமல் இருந்தது. அதுகுறித்து கீதாஞ்சலியுடன் பணியாற்றுபவர்கள் மற்றும் அவருடைய பெற்றோரிடம் போலீசார் விசாரித்தனர்.

பெற்றோர் கட்டாயப்படுத்தி...

இந்த நிலையில், கடந்த 21–ந் தேதி கீதாஞ்சலிக்கு 27–வது பிறந்தநாள் ஆகும். இதனை கொண்டாட பெங்களூருவில் இருந்து தனது சொந்த ஊரான கோவாவுக்கு விடுமுறையில் கீதாஞ்சலி சென்றிருந்தார். அதற்கு முந்தைய நாள் 20–ந் தேதி இரவில் பெற்றோர் பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளை ஒருவருடன் கீதாஞ்சலிக்கு திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை அவருக்கு பிடிக்கவில்லை என்றும், அவரை திருமணம் செய்ய கீதாஞ்சலி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

என்றாலும், கீதாஞ்சலியை கட்டாயப்படுத்தி, அவருக்கு பார்த்த மாப்பிள்ளையுடன் பெற்றோர் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதன் காரணமாக மனம் உடைந்த கீதாஞ்சலி தனது பிறந்தநாளை பெற்றோருடன் கொண்டாடிவிட்டு பெங்களூருவுக்கு வந்ததும் நிறுவனத்தின் 10–வது மாடிக்கு சென்று கீழே குதித்து உயிரை மாய்த்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாரத்தஹள்ளி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story