மங்களூரு விமான நிலையத்தில் ரூ.64 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


மங்களூரு விமான நிலையத்தில் ரூ.64 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Dec 2017 11:25 PM GMT (Updated: 1 Dec 2017 11:25 PM GMT)

கடந்த மாதத்தில் மட்டும் மங்களூரு விமான நிலையத்தில் ரூ.64 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தனியார் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து மங்களூருவுக்கும் கடத்தல் சம்பவங்களை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த சோதனையின் அடிப்படையில் கடந்த மாதத்தில் (நவம்பர்) மட்டும் துபாயில் இருந்து மங்களூரு வந்த விமானங்களில் 6 கடத்தல் சம்பவங்களில் 2.141 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.64 லட்சம் ஆகும். இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

முதல் கடத்தல் வழக்கில் துபாயில் இருந்து மங்களூருவுக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் தங்கப்பொடியை கெமிக்கல் மூலம் கலந்து செருப்புகளில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 803 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2–வது வழக்கில், துபாயில் இருந்து வந்த விமானத்தில் 466.40 கிராம் எடை கொண்ட 4 தங்கக்கட்டிகளை பயணி ஒருவர் ‘ஷூ’வுக்குள் மறைத்து கடத்தியது தெரியவந்தது. 3–வது வழக்கில், அதே தினத்தில் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணி கடத்திய 184.29 கிராம் எடை கொண்ட தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல 4–வது வழக்கில் 466.50 கிராம் எடை கொண்ட 4 தங்கக்கட்டிகளை துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 5 மற்றும் 6–வது வழக்குகளில் 2 பயணிகள் கடத்தி வந்த 221 கிராம் தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த 6 வழக்குகளில் 2.141 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.64 லட்சம் ஆகும்.

அனைத்து சம்பவங்களும் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இவர்களில் 3 பேர் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியையும், 2 பேர் பட்கலையும், ஒருவர் தட்சிண கன்னடாவையும் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற 5 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story