டி.டி.வி.தினகரன் பங்கேற்கும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தடை கோரி வழக்கு குமரி மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


டி.டி.வி.தினகரன் பங்கேற்கும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தடை கோரி வழக்கு குமரி மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Dec 2017 11:15 PM GMT (Updated: 18 Dec 2017 8:17 PM GMT)

டி.டி.வி.தினகரன் பங்கேற்க உள்ள கிறிஸ்துமஸ் விழாவுக்கு தடை கோரிய வழக்கில் குமரி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

கன்னியாகுமரி பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த டார்வின் கான்ஸ்டன்ட், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

குமரி மாவட்டம் அருமனையில் இருந்து கேரளா செல்லும் சாலையில் உள்ள அருமனை, கடையாலுமூடு, களியல், பத்துகானி, ஆறுகானி மற்றும் கேரளாவில் நெடுஞ்சாலை ஓரத்தில் கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது மத அமைப்புகள் சாலையின் குறுக்கில் மேடை அமைத்து கிறிஸ்துமஸ், பொங்கல் விழாக்களை நடத்தி வருகின்றன. இவ்விழாக்கள் பல நாட்கள் நடத்தப்படுகின்றன. இந்த நாட்களில் உள்ளூர் மக்களும், வெளியூர் மக்களும் அந்த வழியை பயன்படுத்த முடியாமல் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பிரதான சாலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது சட்டவிரோதமாகும்.

இந்தநிலையில் அருமனையைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் அருமனை போலீஸ்நிலையம் அருகில் வருகிற 22, 23–ந்தேதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதற்காக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன், இலங்கை எதிர்கட்சித்தலைவர் சம்பந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வதாக பிளக்ஸ் பேனர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விழா நடந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். ஓகி புயல் பாதிப்பால் இங்குள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் தாமதமாக தொடங்கி உள்ளன. எனவே பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் வருகிற 22, 23–ந்தேதிகளில் அருமனை போலீஸ் நிலையம் அருகே நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவிற்கு தடை விதிக்க வேண்டும். அவ்விழாவிற்கு அனுமதி வழங்கக்கூடாது என குமரி மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து குமரி மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை வருகிற 20–ந்தேதிக்கு (அதாவது நாளைக்கு) ஒத்திவைத்தார்.


Next Story