விபத்தில் சிக்கிய காருக்கு செலவு செய்வதற்காக தொழிலாளியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது


விபத்தில் சிக்கிய காருக்கு செலவு செய்வதற்காக தொழிலாளியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2018 3:00 AM IST (Updated: 7 Jan 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில், விபத்தில் சிக்கிய காருக்கு செலவு செய்ய தொழிலாளியிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் பாளையக்காட்டை சேர்ந்தவர் மார்ட்டின் ஜோசப்(வயது 56). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் பாளையக்காடு பஸ் நிறுத்தம் அருகே செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென்று மார்ட்டின் ஜோசப்பை தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறித்து விட்டு தப்பிச்செல்ல முயன்றனர்.

உடனடியாக மார்ட்டின் ஜோசப் சத்தம் போட, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து செல்போனை பறித்துச்சென்ற 3 பேரை பிடித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் எம்.எஸ்.நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன்(19) மற்றும் கோவையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் போயம்பாளையத்தை சேர்ந்த 17 வயது மாணவர், மற்றொரு 17 வயது பனியன் நிறுவன தொழிலாளி என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் 3 பேரும் தனது நண்பரிடம் கார் வாங்கி ஓட்டிச்சென்றதாகவும், அந்த கார் மரத்தில் மோதியதால் சேதமடைந்து விட்டதாகவும், அதை சரி செய்ய பணம் தேவைப்பட்டதால் செல்போனை பறித்துச்சென்றதாகவும் 3 பேரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணன், கல்லூரி மாணவர் உள்பட 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story