கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியினருடன் ராகுல் காந்தி ஆலோசனை


கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியினருடன் ராகுல் காந்தி ஆலோசனை
x
தினத்தந்தி 25 March 2018 11:16 PM GMT (Updated: 25 March 2018 11:16 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று மைசூருவில் காங்கிரஸ் கட்சியினருடன் ராகுல்காந்தி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

மைசூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மைசூருவுக்கு வந்தார். அன்றைய தினம், அவர் மைசூரு, சாம்ராஜ்நகர், மண்டியா ஆகிய பகுதிகளில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் மைசூருவில் ஓய்வு எடுத்த ராகுல்காந்தி, நேற்று காலை 11 மணி அளவில் அரசு விருந்தினர் மாளிகையில் காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இதில், முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மந்திரிகள் டி.கே.சிவக்குமார், மகாதேவப்பா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து ராகுல்காந்தி, மைசூரு அரண்மனை எதிரே உள்ள டவுன்ஹால் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். மேலும் அங்கு கட்டப்பட்டுள்ள அம்பேத்கரின் மணிமண்டபத்தையும் அவர் திறந்து வைத்தார். இதில் முதல்-மந்திரி சித்தராமையா, பரமேஸ்வர் உள்பட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர்.

இந்த சிலையை உருவாக்கி நீண்ட நாட்கள் ஆகியும், பல்வேறு காரணங்களால் திறப்பு விழா தள்ளி போனது. இந்த சிலையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந்தேதி அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி திறக்க முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அதற்குள் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவித்துவிட்டால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இதனால், அரசு சார்பில் விழா நடத்தி சிலையை திறக்க முடியாது. இதன்காரணமாக, ராகுல்காந்தி மைசூருவுக்கு வந்திருக்கும் சமயத்தில் அம்பேத்கர் சிலையை திறக்க முடிவு செய்து, நேற்றே திறக்கப்பட்டுள்ளது. 

Next Story