மனைவி கத்தியால் குத்திக்கொலை; கணவருக்கு வலைவீச்சு


மனைவி கத்தியால் குத்திக்கொலை; கணவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 April 2018 4:15 AM IST (Updated: 23 April 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு ஆசிரியர்காலனி அவ்வையார் வீதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் பிரபல கொசுவர்த்தி நிறுவனத்தில் பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தீபரஞ்சினி (வயது 25). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3½ வயதில் கனிஷ்கா என்கிற மகள் உள்ளாள்.

விவேகானந்தனும், தீபரஞ்சினியும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து உள்ளனர். அவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பையும் மீறி விவேகானந்தனும், தீபரஞ்சினியும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது விவேகானந்தன் தனது பெற்றோருடன் ஆசிரியர்காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் வசித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக தீபரஞ்சினியின் நடத்தையில் விவேகானந்தனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று இரவு 7 மணிஅளவில் தீபரஞ்சினி வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த விவேகானந்தன், சமையல் அறைக்கு சென்றார். அங்குள்ள ஜன்னல் வழியாக வெளிநபர்கள் பார்க்க வாய்ப்பு இருப்பதாகவும், ஜன்னல் கதவை அடைத்துவிட்டு சமையல் செய்யுமாறும் அவர் கூறிஉள்ளார்.

இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது தீபரஞ்சினியை விவேகானந்தன் தாக்கி உள்ளார். இதனால் மாடியில் இருந்து தீபரஞ்சினி விறுவிறுவென இறங்கி கீழே வந்தார். அவரை விவேகானந்தனும் துரத்தினார். வீட்டிற்கு வெளியே வீதிக்கு வந்த தீபரஞ்சினியை விவேகானந்தன் மடக்கினார். பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தீபரஞ்சினியை தலை, மார்பு, முதுகு உள்ளிட்ட இடங்களில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தீபரஞ்சினி சரிந்து விழுந்தார்.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்தனர். அவர்கள் தீபரஞ்சினியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தீபரஞ்சினி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரமேஷ், சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வைதேகி வரவழைக்கப்பட்டது. அது ரத்தக்கறை படிந்த இடத்தை நுகர்ந்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீபரஞ்சினியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய விவேகானந்தனை வலைவீசி தேடி வருகிறார்கள். ஈரோட்டில் நடுவீதியில் வைத்து மனைவியை கணவர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story