11 அதிகாரிகளின் வீடுகளில் 100 பவுன் நகை, பணம் கொள்ளை நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை


11 அதிகாரிகளின் வீடுகளில் 100 பவுன் நகை, பணம் கொள்ளை நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 1 May 2018 5:00 AM IST (Updated: 1 May 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை பெல் குடியிருப்பு வளாகத்தில் 11 அதிகாரிகளின் வீடுகளில் 100 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை பெல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள 11 அதிகாரிகளின் வீடுகளில் 100 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பெல் அருகில் பெல் ஊரகத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் சுமார் 1,350 குடியிருப்புகள் உள்ளன. இங்கு பெல் தொழிற்சாலையில் வேலை செய்கின்ற அதிகாரிகளும், ஊழியர்களும் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு வளாகத்தின் அருகிலேயே 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சுமார் 240 குடியிருப்புகள் கட்டப்பட்டன. புதிய குடியிருப்பில் பெரும்பாலும் பெல் நிறுவன அதிகாரிகளே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு இக்குடியிருப்பு வளாகத்தில் (சி டைப்) உள்ள 11 வீடுகளில் நகை, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்த குடியிருப்பில் வசிக்கும் பால்ராஜ்நாயக் (வயது 38), மோகனன் (59), காந்திபரிமளம் (53), மனோஜ்குமார், அஷ்ரிதா (35), ராம்தாஸ்ஷெட்டி (33), யுவராஜ் (30), கிஷோர்குமார் (32), முத்துகுமார், சுதீஷ் சுகுமார் (38), திவில்சு கந்பால் ஆகிய அதிகாரிகள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நேரத்தில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

கொள்ளையர்கள் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைக்காமல், லாவகமாக தாழ்ப்பாளின் ஸ்குருக்களை கழற்றிவிட்டு வீட்டின் உள்ளே சென்று நகை, பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் காந்திபரிமளம் வீட்டில் ரூ.25 ஆயிரமும், கிஷோர்குமார் வீட்டில் 31 பவுன் நகையும், அஷ்ரிதா வீட்டில் 25 பவுன் நகையும், யுவராஜ் வீட்டில் 30 பவுன் நகையும் உள்பட 100 பவுன் கொள்ளையடிக்கப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளில் உள்ள தடயங்களை சேகரித்தனர்.

பெல் ஊரகத்தில் கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி 6 வீடுகளில் 65 பவுன் நகைகள், வெள்ளிபொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் 4 மாதங்களில் அதே பகுதியில் மீண்டும் 11 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் இயங்கி வரும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு குழு சார்பில், மாவட்ட கலெக்டரிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்ககோரியும், கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் நேற்று மனு அளித்தனர்.

Next Story