நாங்குநேரி அருகே போலீஸ் ஏட்டு கொலை: மணல் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது தரகர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
நாங்குநேரி அருகே போலீஸ் ஏட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக மணல் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தரகர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இட்டமொழி,
நாங்குநேரி அருகே போலீஸ் ஏட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக மணல் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தரகர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீஸ் ஏட்டு கொலைநெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில், தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் ஜெகதீஷ்துரை (வயது 34). இவர் ரோந்து சென்ற போது டிராக்டரில் மணல் கடத்திச் சென்ற கும்பலை பிடிக்க முயன்றார். அப்போது அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏட்டு ஜெகதீஷ் துரையை அடித்துக் கொலை செய்தனர்.
இதுதொடர்பாக வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தாமரைகுளத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் முருகன் (30) உள்பட 8 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
மேலும் ஒருவர் கைதுஇதற்கிடையே மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்த கிருஷ்ணன், பாலிடெக்னிக் மாணவர் முருகபெருமாள் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர். போலீசார் தேடி வந்த 6 பேரில் மணிக்குமார் (27) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
முக்கிய குற்றவாளியான முருகன் மற்றும் மணல் தரகர் சேர்மத்துரை உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதுதவிர மணல் கடத்தல் கும்பலுக்கு வேறு யாராவது உதவி செய்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக கூறப்படும் சப்–இன்ஸ்பெக்டர் பற்றி விசாரணை நடத்தவும் போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.
ஐ.ஜி. பேட்டிஇதற்கிடையே ஏட்டு உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கீழசிந்தாமணிக்கு வந்த போலீஸ் ஐ.ஜி. சைலேஸ்குமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏட்டுவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபற்றி முதல்- அமைச்சர்தான் முடிவு செய்வார். மேலும் கொலையாளிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொலையில் இன்னும் தீவிர விசாரணை நடத்த வேண்டிய உள்ளது. எனவே, முழு விவரங்களையும் தெரிவிக்க முடியாது. அப்படி தெரிவித்தால் அது வழக்கு விசாரணையை பாதித்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் ஐ.ஜி.யிடம், ஏட்டு ஜெகதீஷ்துரையின் மனைவி மரியரோஸ் மார்க்ரெட் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது கணவரை மணல் கொள்ளையர்கள் கொலை செய்து விட்டனர். எனக்கு 3½ வயதில் மகன் இருக்கிறான். நான் 5 மாதம் கர்ப்பமாக உள்ளேன். நான் எம்.காம்., பி.எட்., எம்.பில். படித்துள்ளேன். எனவே, எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எனது கணவர் மரணத்தை வீரமரணமாக அறிவித்து ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.