காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் 6 பேர் கைது


காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2018 11:30 PM GMT (Updated: 16 May 2018 8:32 PM GMT)

காங்கிரஸ் பிரமுகர் கொலையில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் மற்றும் நிலத்தை விற்க விடாமல் தகராறு செய்ததால் பழிக்குப்பழியாக அவரை கொலை செய்ததாக போலீசில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை குருசுக்குப்பம் மரவாடி தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 46). காங்கிரஸ் மீனவர் அணி தலைவர். இவர் கடந்த (ஏப்ரல்) மாதம் 6–ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது செஞ்சி– ஆம்பூர் சாலை சந்திப்பில் ஒருகும்பலால் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக கடந்த மார்ச் 6–ந் தேதி கொலை செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவரும் காங்கிரஸ் பிரமுகருமான மாறனின் மகன் ராஜ்பிரபு உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். மாறன் கொலைக்கு பழிக்குப்பழியாகத் தான் பாண்டியன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் மாறன் கொலைக்கு பழிக்குப்பழியாகவும், நிலத்தகராறு உள்பட பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவும் பாண்டியன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த பிளம்பர் புல்ரி குடும்பத்தினர் ஏற்கனவே குருசுக்குப்பம் பகுதியில் வசித்தபோது அவர்களுக்கு பாண்டியன் தரப்பினர் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மேலும் அவர்களது உறவினர்களின் நிலத்தை விற்க முயன்றபோது அதில் 3–ல் ஒரு பங்கு தொகையை தனக்கு தரவேண்டும் என்று கேட்டு பாண்டியன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை தீர்த்துக்கட்ட தனது கூட்டாளிகளுடன் புல்ரி திட்டம் தீட்டினார்.

அதன்படி பாண்டியனை புல்ரி தரப்பினர் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புல்ரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின் புல்ரியின் கூட்டாளிகளான குருசுக்குப்பம் அரிதரன், வினோபா நகர் ஆண்ட்ரூஸ், லாஸ்பேட்டை விஜய், பாக்குமுடையான்பேட்டை பிரவீன்குமார், வினோபா நகர் ஜான் பாப்டிஸ்ட் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், மொபட், வீச்சரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள விமல், மாறனின் மகன் ராஜ்பிரபு உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இவர்களில் ஒருவர் பிரபல ரவுடி ஆவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா பாராட்டினார்.

‘போலி ஏ.டி.எம். குற்றவாளிகள் விரைவில் கைதவார்கள்’ சீனியர் சூப்பிரண்டு தகவல்

புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மற்றவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 5 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோரை பிடிக்க போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story