விபத்தில் பெண் போலீஸ் பலி: நாடக சபா உரிமையாளர் கைது


விபத்தில் பெண் போலீஸ் பலி: நாடக சபா உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2018 3:45 AM IST (Updated: 7 Jun 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் பெண் போலீஸ் இறந்ததில், திடீர் திருப்பமாக நாடக சபா உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகள் பூங்குழலி (வயது 24). இவர் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வந்தார். கடந்த 3–ந் தேதி காலை தனது மொபட்டில் போலீஸ் நிலையத்திற்கு பூங்குழலி புறப்பட்டு வந்தார்.

வில்லியனூரை அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியில் வந்தபோது, எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பூங்குழலி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த பூங்குழலி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் பூங்குழலியை யாரோ திட்டமிட்டு காரை ஏற்றி கொலை செய்துவிட்டனர். இதுபற்றி தீவிர விசாரணை நடத்தவேண்டும் என்று பூங்குழலியின் தந்தை ஜெயராமன் போலீஸ் டி.ஐ.ஜி. சந்திரனிடம் முறையிட்டார். இதையடுத்து பூங்குழலி சாவு குறித்து தீவிர விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணிக்கு டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.

அதன்பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர வல்லாட், சப்–இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விபத்து நடந்த பத்துக்கண்ணு – கூடப்பாக்கம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் அந்த வழியாக டெம்போ வாகனம் ஒன்று சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பில்ராம்பட்டு பகுதியை சேர்ந்த நாடக சபா உரிமையாளர் நாராயணசாமி என்பவரின் வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

கடந்த 2–ந் தேதி இரவு கூடப்பாக்கம் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் இரவு நாடக நிகழ்ச்சியை அரங்கேற்றிவிட்டு, மறுநாள் அதிகாலை நாடக குழுவினர் டெம்போ வாகனத்தில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். பிள்ளையார்குப்பம் அருகே சென்றபோது எதிரே வந்த பெண் போலீஸ் பூங்குழலி மீது டெம்போ மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு, தலையில் படுகாயம் ஏற்பட்டது.

உடனே டெம்போவை ஓட்டிவந்த நாராயணசாமி மற்றும் நாடக குழுவினர், சிறிது தூரத்தில் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த பூங்குழலியை மீட்டு தண்ணீர் கொடுத்தனர். அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டு விட்டனர்.

டெம்போ வாகனம் மோதியது என்று தெரியவந்தால் நாடக குழுவினரை பொதுமக்கள் தாக்கி விடுவார்கள் என்ற பயத்தில், அந்த வழியாக வேகமாக சென்ற கார் பூங்குழலியை இடித்துவிட்டு சென்றதாக அவர்கள் கூறிவிட்டனர். பின்னர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்துவிட்டு நாடக குழுவினர் சொந்த ஊருக்கு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் விபத்து ஏற்படுத்திய நாடக சபா உரிமையாளரும், டெம்போ வாகன ஓட்டுனருமான நாராயணசாமியை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் பூங்குழலியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர் சிங் யாதவ் கூனிச்சம்பட்டுக்கு நேற்று சென்றார். அவரிடம், பூங்குழலியின் தந்தை ஜெயராமன், எனது மகளின் வருமானத்தை நம்பியே குடும்பம் இருந்தது. தற்போது அவளும் இல்லை. எனவே பட்டப்படிப்பு படித்துள்ள எனது மகனுக்கு காவல்துறையில் வேலை வழங்கவேண்டும், அரசு தரப்பில் நிவாரண உதவி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுபற்றி பரிசீலனை செய்வதாக போலீஸ் ஐ.ஜி. உறுதி கூறினார்.


Next Story