தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை


தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 12 Jun 2018 4:48 AM IST (Updated: 12 Jun 2018 4:48 AM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் தொடர்பாக காவலாளி, வேலையாட்களின் கைரேகை பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

சேலம் அழகாபுரம் பிருந்தாவன் ரோட்டில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சண்முகசுந்தரம் (வயது 59) என்பவர் வசித்து வருகிறார். தொழில் அதிபரான இவர் சிமெண்டு நிறுவனம் ஒன்றில் சேலம் மாவட்ட மொத்த விற்பனையாளராக உள்ளார். சண்முகசுந்தரம் கடந்த 9-ந் தேதி தனது மனைவியுடன் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் தனது வீட்டு சாவியை காவலாளி ஆறுமுகத்திடம் கொடுத்துள்ளார்.

அன்று பிற்பகல் வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர் காவலாளியிடம் சாவியை வாங்கி கொண்டு திறக்க சென்ற போது அங்கு வேறு ஒரு பூட்டு போடப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் வீட்டில் வேறு பூட்டு போட்டிருப்பதாக கூறி சாவியை காவலாளியிடம் ஒப்படைத்துவிட்டு சென்று விட்டார்.

இதுகுறித்து காவலாளி, சண்முகசுந்தரத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் தனது மனைவியுடன் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 150 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி, அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் வந்து விசாரித்தனர்.இதில், சண்முகசுந்தரம் வெளியூர் செல்வதை மர்ம ஆசாமிகள் நோட்டமிட்டு பின்னர் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடுத்து சென்றது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் வீட்டு காவலாளி ஆறுமுகம், சண்முகசுந்தரம் வீட்டில் வேலைபார்க்கும் பெண் செல்வி மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வேலைபார்க்கும் மேலும் 3 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் கைரேகை பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் 2 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்து அதன் அடிப்படையிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story