மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் குறுவை நடவு பணி மும்முரம் + "||" + The planting of the quarry is trimmed through the borewell in the district of Thanjavur

தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் குறுவை நடவு பணி மும்முரம்

தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் குறுவை நடவு பணி மும்முரம்
தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் குறுவை நடவு பணி மும்முரமாக நடக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.


குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். அவ்வாறு திறக்காமல் தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி குறைந்துவிடும். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறக்கப்படாததால் எதிர்பார்த்த அளவு குறுவை சாகுபடி நடைபெறவில்லை.

ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் குறைந்த அளவு தண்ணீர் இருந்ததால் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் ஆற்றுப்பாசனம் மூலம் குறுவை சாகுபடி செய்யப்படும் வயல்கள் எல்லாம் தரிசாக காணப்படுகிறது. அதில் ஆடு, மாடுகள் மேய்கின்றன. ஆழ்துளை கிணறு மூலம் மட்டும் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சை, பூதலூர், திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட இடங்களில் குறுவை சாகுபடிக்கான நடவு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே கீழ திருப்பூந்துருத்தி அருகே நாகத்தி ரோடு கரூர் பகுதியில் நேற்று குறுவை சாகுபடிக்காக நாற்று நடவு செய்யும் பணியில் பெண்கள் ஆர்வமாக ஈடுபட்டனர். அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு இல்லாத விவசாயிகள் தங்களது நிலங்களை தரிசாக போட்டுள்ளனர். ஆற்றில் தண்ணீர் வரும் போது ஒரு போக சாகுபடியாவது செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்தநிலையில் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளதால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இனிமேல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டாலும் குறுவை சாகுபடி செய்ய முடியாது. சம்பா சாகுபடி மட்டுமே செய்ய முடியும். இதனால் குறுவை சாகுபடி செய்யாத ஆற்றுப்பாசனத்தை மட்டும் நம்பியுள்ள விவசாயிகளுக்கு, ஒரு போக சம்பா சாகுபடியாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இதற்காக அவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த ஆண்டு சம்பா சாகுபடி அதிக பரப்பளவில் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்யாமல் ஆற்றுப்பாசன விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கையில் போதுமான அளவு பணம் இல்லை. இதனால் சம்பா சாகுபடி மேற்கொள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும். இந்த மாத(ஜூலை) இறுதியில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் 25 நாட்கள் கழித்து கடைமடை பகுதிக்கு சென்று சேரும். அப்போது தான் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக நடவு பணியை முடிக்க முடியும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சை மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் மதியழகன் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் 35 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 30 ஆயிரம் எக்டேரில் சாகுபடி பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இனிமேல் குறுவை சாகுபடி செய்ய முடியாது. சம்பா சாகுபடி தான் செய்ய முடியும். இதற்கு தேவையான நீண்டகால, குறுகிய கால, மத்தியகால விதைநெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.