நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க சிறப்பு கண்காணிப்புக்குழு அமைப்பு


நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க சிறப்பு கண்காணிப்புக்குழு அமைப்பு
x
தினத்தந்தி 21 July 2018 3:45 AM IST (Updated: 21 July 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் நடத்திய திடீர் சோதனையில் 46 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க 1998–ம் ஆண்டு தமிழகத்திலேயே முதல் முறையாக பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து உள்ளாட்சிகளில் ஒப்புதல் பெறப்பட்டு, கடந்த 2000–ம் ஆண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவர்கள் மீது அபராதம் விதிப்பதற்கான உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து நீலகிரியில் பிளாஸ்டிக் பைகளில் பச்சை தேயிலை நிரப்புவதை குறைக்க மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தென்னை நாறில் இருந்து சாக்குப்பைகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இதை முழுமையாக மகளிர் சுய உதவிக்குழுவால் செயல்படுத்த முடியவில்லை.

மேலும் தேயிலைத்தூள் நிரப்பும் பைகளின் உள்பகுதியில் பிளாஸ்டிக் இருக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு, தற்போது துணிப்பைகளில் தேயிலைத்தூள் பேக்கிங் செய்யப்படுகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடுகாணி, எருமாடு, கக்கனல்லா, பாட்டவயல், குஞ்சப்பனை, பர்லியார், முள்ளி ஆகிய சோதனைச்சாவடிகளில் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை பெற்று, அவர்களிடம் துணிப்பைகள் வழங்கப்பட்டது. நாளடைவில் துணிப்பை வழங்குவது குறைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 15–ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் விவரங்கள் மாவட்ட அரசிதழில் கடந்த மே மாதம் 9–ந் தேதி வெளியிடப்பட்டது. அதன் பின்னர் புகாரின் பேரில், ஊட்டி நகரில் 2 ஓட்டல்களில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ.55 ஆயிரம் நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாவட்ட அளவிலான சிறப்பு கண்காணிப்புக்குழு தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவில் கலால்துறை தாசில்தார், ஊட்டி தாசில்தார், நகராட்சி அதிகாரிகள், உணவுத்துறை அதிகாரி மற்றும் அரசு துறை அதிகாரிகள் அடங்கி உள்ளனர். இந்த சிறப்பு கண்காணிப்புக்குழு அதிகாரிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். மார்க்கெட்டில் உள்ள 50–க்கும் மேற்பட்ட கடைகளில் 51 மைக்ரான் அளவுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து பிளாஸ்டிக் தடிமானம் கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தனர். இதில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கோட்டிங் போடப்பட்ட பேப்பர்கள் உள்ளிட்டவை 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுபோல் கீழ்குந்தா பேருராட்சிக்குட்பட்ட மஞ்சூர் பஜாரில் அமைந்துள்ள அனைத்து வணிக வளாகங்களில் கீழ்குந்தா பேருராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் குந்தா வட்ட வழங்கல் அலுவலர் ஷிராஜ் நிஷா முன்னிலையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. 20–க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் 2 கிலோ பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் கிடைத்தன. இதனை தொடர்ந்து கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.3700 அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்த கடைக்காரர்களிடம் எச்சரித்த செயல் அலுவலர் ரவிக்குமார், இனியும் பிளாஸ்டிக் பொருட்களை மீறி விற்பனை செய்யப்பட்டு, அடுத்த முறை சோதனையில் தெரிய வந்தால் ரூ.1 லட்சம் அபராதம் வழங்குவதுடன் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என கூறினார்.

குன்னூர் பெட் போர்டு பகுதியில் உள்ள 5 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என்று நகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் ரகுநந்தன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மொத்த விற்பனைகடை மற்றும் 4 கடைகளில் சுமார் 34 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த 5 கடை களுக்கு 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மொத்த விற்பனை துணி கடைக்குமட்டும் 53 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனை தொடரும் என்று அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:–

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதை வரவேற்கிறோம். இதன் மூலம் வனவிலங்குகள், கால்நடைகள், பறவைகள் பாதுகாக்கப்படும். அதிக அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தற்போது பல்வேறு இடங்களில் விதிமுறைகளை மீறியும், அனுமதி இல்லாமலும் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை கண்டறிய பல்வேறு அரசு துறைகள் அடங்கிய ஒரு குழு மாவட்ட அளவில் அமைக்க வேண்டும். அப்போது தான் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் முழுமையாக பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story