ராக்கெட் ராஜா மிரட்டல் விடுப்பதாக வழக்கு பாதுகாப்பு கேட்ட பெண்ணின் மனுவை நெல்லை போலீஸ் கமிஷனர் பரிசீலிக்க வேண்டும், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ராக்கெட் ராஜா மிரட்டல் விடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் பாதுகாப்பு கேட்ட பெண்ணின் மனுவை நெல்லை போலீஸ் கமிஷனர் பரிசீலிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த அனுஷா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது கணவர் செந்தில்குமார் சிவில் பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டார். தற்போது 4 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறேன். எனது கணவர் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். இந்தநிலையில் எங்களுக்கு ராக்கெட் ராஜா தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. இதனால் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய கமிஷனரிடம் மனு அளித்தேன். என் மனு மீது, நெல்லை டி.ஐ.ஜி. நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், இந்த விஷயத்தில் கோர்ட்டு தலையிட்டு எனக்கும், என் குடும்பத்தாருக்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நேற்று விசாரித்தார். முடிவில், மனுதாரர் கோரிக்கை குறித்து நெல்லை போலீஸ் கமிஷனர் 2 வாரத்திற்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.