மேட்டூர் அணை தண்ணீரை ஏரி,குளங்களில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு


மேட்டூர் அணை தண்ணீரை ஏரி,குளங்களில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 21 Aug 2018 5:32 AM IST (Updated: 21 Aug 2018 5:32 AM IST)
t-max-icont-min-icon

வீணாக கடலில் கலக்கும் மேட்டூர் அணை தண்ணீரை ஏரி,குளங்களில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வேலூர்,

வீணாக கடலில் கலக்கும் மேட்டூர் அணையின் தண்ணீரை ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லதம்பி எம்.எல்.ஏ. கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் அட்டை, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு வகையான 382 மனுக்கள் பெறப்பட்டன. அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்களை அளித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி, கலெக்டரிடம் 2 மனுக்கள் அளித்தார். அதில், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. அதனை ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த நீரினை மாவட்டத்தில் குடிநீர் ஆதாரத்தை பெருக்கவும், வேளாண்மைக்கு பயன்படுத்தவும் ஆவண செய்ய வேண்டும்.

மற்றொரு மனுவில், திருப்பத்தூர் நகராட்சியில் பெரும்பாலான கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. அதனால் தொற்றுநோய் ஏற்படும் நிலை காணப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

வேலூர் சிறுதுளிர் சமூக நலச்சங்கத்தினர், கலெக்டரிடம் அளித்த மனுவில், வேலூர் சின்ன அல்லாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இதில் சில விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. காலை 10 மணியளவில் கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து 12 மணிவரை பள்ளியின் நுழைவுவாயில் பூட்டப்பட்டிருந்தது. சுதந்திரதினத்தன்று மாணவர்களை உள்ளே வைத்து அடைத்திருந்தனர். அதேபோன்று வெளியே சமைத்த உணவு மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. இவை அனைத்தும் விதிமீறலாகும். இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி நிர்வாக பொறுப்பாளர் ஆகியோர் காரணமாகும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பேரணாம்பட்டு ஒன்றியத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 10-க்கும் மேற்பட்டோர் முறையாக மாற்றுத்திறனாளி நிதியுதவி வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) பேபி இந்திரா, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கலெக்டர் அலுவலக மேலாளர் முரளி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story