விழுப்புரத்தில் பரபரப்பு: எக்ஸ்பிரஸ் ரெயிலில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் திடீர் போராட்டம்


விழுப்புரத்தில் பரபரப்பு: எக்ஸ்பிரஸ் ரெயிலில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2018 4:00 AM IST (Updated: 26 Aug 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

எக்ஸ்பிரஸ் ரெயிலில் தண்ணீர் வசதி இல்லாததால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் விஜயவாடாவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை கடந்து தாம்பரம் ரெயில் நிலையம் அருகில் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்பதிவு பெட்டிகளில் ஒன்றான எஸ்-8 என்கிற பெட்டியில் உள்ள கழிவறையில் திடீரென தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த பெட்டியில் பயணம் செய்தவர்கள், அவசர தேவைக்காக கழிவறையை உபயோகிக்க முடியாமல் போனது.

இதுபற்றி ரெயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் முறையிட்டுள்ளனர். அதற்கு அடுத்த ரெயில் நிலையம் வந்ததும் ரெயில் பெட்டியில் தண்ணீர் நிரப்பப்படும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு தண்ணீர் நிரப்பப்படவில்லை.

இதனிடையே இரவு 11 மணியளவில் அந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அதன் பிறகும் அந்த ரெயில் பெட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமல் ரெயில் புறப்பட தொடங்கியது. இதையறிந்த அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

பின்னர் ரெயிலில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கி ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் சென்று கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு சென்றதும் அங்கிருந்து ரெயில் பெட்டிக்கு தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்ற பயணிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு ரெயிலில் ஏறினர். அதன் பிறகு அந்த ரெயில் ½ மணி நேரம் தாமதமாக விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டது. இந்த திடீர் போராட்டத்தினால் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விருத்தாசலம் ரெயில் நிலையத்தை சென்றடைந்த பின்னர், அந்த ரெயில் பெட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது.

Next Story