நாகர்கோவில்: போலீசார் அதிரடி நடவடிக்கை - ரூ.41 லட்சம் குட்கா, போதை பாக்குகள் பறிமுதல்


நாகர்கோவில்: போலீசார் அதிரடி நடவடிக்கை - ரூ.41 லட்சம் குட்கா, போதை பாக்குகள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Oct 2018 11:15 PM GMT (Updated: 5 Oct 2018 8:20 PM GMT)

நாகர்கோவிலில் ரூ.41 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் ரூ.41 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். குடோன் உரிமையாளரை வலைவீசி தேடிவருகின்றனர்.

நாகர்கோவில் அருகே சரக்கல்விளை பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா), போதை பாக்குகள் மூடை, மூடையாக பதுக்கி வைக்கப்படுவதாகவும், அங்கிருந்தே பல்வேறு மொத்த கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தினமும் மாறு வேடத்தில் சரக்கல்விளை செண்பகவீதியில் அமைந்துள்ள குடோனை கண்காணித்து வந்தனர்.

இதேபோல் நேற்று காலையிலும் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த குடோனுக்குள் ஒரு சரக்கு ஆட்டோ சென்றது. அந்த நேரத்தில் வெளி மாவட்ட பதிவு எண்ணை கொண்ட மினி லாரி ஒன்று தார்ப்பாயால் மூடப்பட்ட நிலையில் அந்த குடோனுக்குள் நுழைந்தது.

அங்கு மறைந்து இருந்த தனிப்படை போலீசார் அந்த குடோனுக்குள் அதிரடியாக நுழைந்து அந்த மினிலாரியை சுற்றி வளைத்தனர். பின்னர் வெளிமாநில பதிவெண் கொண்ட மினி லாரியில் சோதனை செய்தனர். சோதனையில் அதில் பண்டல், பண்டலாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள், போதை பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த குடோனில் நடத்திய சோதனையில் பண்டல், பண்டலாக குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் போதை பாக்குகள் இருந்தன. அவற்றை ஏற்றி கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காகத்தான் சரக்கு ஆட்டோ அந்த குடோனுக்கு வந்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் மினி லாரி மற்றும் குடோனில் இருந்த 201 பண்டல் புகையிலை பொருட்கள், போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வெளிமாவட்ட பதிவெண்ணை கொண்ட மினி லாரி டிரைவரான சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 28), குடோன் ஊழியர்களான கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த கணேஷ் (29), கோட்டார் முதலியார்விளையை சேர்ந்த அரிகரசுதன் (26) ஆகிய 3 பேரை பிடித்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, போதை பாக்கு பண்டல்களையும், பிடிபட்ட 3 பேரையும் தனிப்படை போலீசார், கோட்டார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குடோனை நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரியை சேர்ந்த ரமேஷ் என்பவர் நடத்தி வந்ததும், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்களை பெங்களூருவில் இருந்து மினி லாரியில் ஏற்றி வந்ததும், இந்த குடோனில் இருந்து குமரி மாவட்ட பகுதிகளில் உள்ள மொத்த கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டதும் தெரிய வந்தது. எனவே குடோனை நடத்தி வந்த புத்தேரியை சேர்ந்த ரமேஷ் என்பவரை பிடித்தால் தான் பெங்களூருவில் யாரிடம் இருந்து குட்கா மற்றும் போதை பாக்குகள் கொள்முதல் செய்யப்பட்டது என்பது தெரிய வரும் என போலீசார் கருதுகின்றனர்.

இதையடுத்து சுதாகர், கணேஷ், அரிகரசுதன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரமேசை வலைவீசி தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட 201 பண்டல்களில் இருந்த குட்கா மற்றும் போதை பாக்குகள் 2 டன் எடை கொண்டது எனவும், இவற்றின் மதிப்பு ரூ.41 லட்சம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story