குவைத், மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல்; ஒருவர் கைது
குவைத், மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்தும் மற்ற 3 பேரிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது குவைத்தில் இருந்து ஒரு விமானம் வந்தது.
இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மஸ்தான்கான் என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அவரது உடமைகளில் துண்டிக்கப்பட்ட 5 தங்க கட்டிகள், 5 கை வளையம், தங்க ஆபரணங்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.55 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 700 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த முகமது பாசித்(26), திருச்சியை சேர்ந்த ஷேக் அஸ்ரப் அலி (33), சிவகங்கையை சேர்ந்த இஸ்மாயில் ஷேக் தாவூத்(22) ஆகியோர் வந்தனர். 3 பேரின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.
அப்போது அவர்களது உடமைகளில் 11 சீலிங் பேன் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது மோட்டாரில் தங்க போல்டு, கம்பிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடம் இருந்தும் ரூ.43 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 340 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
ஒரே நாளில் நடத்திய சோதனையில் ரூ.98 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 40 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த மஸ்தான் கானை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மற்ற 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.