வீட்டின் மீது டிராக்டர் மோதியது: சுவர் இடிந்த அதிர்ச்சியில் மூதாட்டி சாவு


வீட்டின் மீது டிராக்டர் மோதியது: சுவர் இடிந்த அதிர்ச்சியில் மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 16 Oct 2018 11:15 PM GMT (Updated: 16 Oct 2018 9:00 PM GMT)

எடப்பாடி அருகே வீட்டின் மீது டிராக்டர் மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்த அதிர்ச்சியில் மூதாட்டி உயிரிழந்தார்.

எடப்பாடி,

எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி பகுதியில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் பலர் அங்கு முகாமிட்டு வேலை செய்து வருகிறார்கள். நேற்று காலை கொட்டாபுலியூர் பகுதியில் இருந்து தளவாட பொருட்களை வடமாநில வாலிபர் ஒருவர் டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

அப்போது அரியாம்பாளையம் குடியிருப்பு பகுதியின் வழியாக டிராக்டர் சென்ற போது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த டிராக்டர் அய்யனார் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மீது மோதியது.

மோதிய வேகத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த அய்யனாரின் மனைவி இருசாயி (வயது 64) என்பவர் சுவர் விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த அதிர்ச்சியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் சுவர் இடிந்து விழுந்த அதிர்ச்சியில் மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story