அருப்புக்கோட்டை வன்னிய நாடார் ஊருணி ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் - கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


அருப்புக்கோட்டை வன்னிய நாடார் ஊருணி ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் - கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Oct 2018 10:30 PM GMT (Updated: 23 Oct 2018 8:07 PM GMT)

அருப்புக்கோட்டை வன்னிய நாடார் ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கருவேல மரங்களை 12 வாரங்களுக்குள் அகற்றி ஊருணியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர்,

அருப்புக்கோட்டையில் வன்னிய நாடார் ஊருணி உள்ளது. இந்த ஊருணி பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த ஊருணி கட்டிடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டும், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்தும் இருந்து வரும் நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து வன்னிய நாடார் டிரஸ்ட் நிர்வாகி விருதுநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜனகராஜன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த வன்னியநாடார் ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும், ஊருணி நிலத்தில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள பட்டா மற்றும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கான வரிவிதிப்பு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது விருதுநகர் மாவட்ட கலெக்டர் தாக்கல் செய்திருந்த அறிக்கையில் ஊருணியின் 111/5 சர்வே எண்ணில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும், கடைகளையும் அகற்ற தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும், 111/6 சர்வே எண்ணில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்த ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை சட்டப்படி அகற்ற வேண்டும் என்றும், 111/6 சர்வே எண்ணில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவு கிடைத்த 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை நீர்நிலையாக மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும், இதற்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Next Story