18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய கோரிய மனு தள்ளுபடி


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய கோரிய மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 25 Oct 2018 3:45 AM IST (Updated: 25 Oct 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.

மதுரை,

மதுரை கொடிமங்கலத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதியின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை நீதிபதி எம்.சுந்தர் வழங்கினார்.

இதையடுத்து நீதிபதி எம்.சுந்தர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த வி‌ஷயத்தை உடனடியாக தலைமை நீதிபதியின் கவனத்துக்கு நீதிபதி எம்.சுந்தர் கொண்டு சென்றார்.

இதையடுத்து கொலை மிரட்டல் குறித்து சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நீதிபதி எம்.சுந்தர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் மிரட்டல் விடுத்தவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

எனவே இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரித்து, குற்றவாளியை விரைவாக கைது செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், ‘‘மனுதாரர் கோரிக்கையை பொதுநலன் சார்ந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story