கந்து வட்டி கேட்டு கொலை முயற்சி செய்தவரை கைது செய்ய வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டிடம் தொழிலாளி மனு


கந்து வட்டி கேட்டு கொலை முயற்சி செய்தவரை கைது செய்ய வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டிடம் தொழிலாளி மனு
x
தினத்தந்தி 12 Nov 2018 9:45 PM GMT (Updated: 12 Nov 2018 7:07 PM GMT)

கந்து வட்டி கேட்டு கொலை முயற்சி செய்தவரை கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் தொழிலாளி மனு கொடுத்தார்.

ஈரோடு,

சென்னிமலை அருகே உள்ள அம்மாபாளையம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (வயது 44). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனை நேற்று சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:–

நான் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தின் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடனாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி இருந்தேன். நான் வாங்கிய கடனுக்காக இதுவரை ரூ.4 லட்சம் வரை கட்டி விட்டேன். ஆனால் அந்த நபர் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் கந்து வட்டி கேட்டு என்னை தொடர்ந்து மிரட்டி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நான் வீட்டில் இருந்தேன். அப்போது அந்த நபர், தன்னுடன் 2 பேரை அழைத்து கொண்டு வந்து என்னை அடித்து, உதைத்து கொலை செய்ய முயன்றனர். அப்போது எனது தலையில் இருந்து ரத்தம் வழிந்தது.

இதைப்பார்த்து என்னுடைய குழந்தைகள் அழுததால் அவர்கள் என்னை விட்டுவிட்டு சென்று விட்டனர். அதைத்தொடர்ந்து நான் சென்னிமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். கந்து வட்டி கேட்டு கொலை செய்ய முயன்ற அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.


Next Story