தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை பறிமுதல் செய்த படகுகளை மீட்காததால் ஐகோர்ட்டில் புதிய மனு அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை பறிமுதல் செய்த படகுகளை மீட்காததால் ஐகோர்ட்டில் புதிய மனு அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 18 Nov 2018 4:33 AM IST (Updated: 18 Nov 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்காததால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் மோர்பண்ணையை சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி தொழில் உள்ளது. சமீபகாலமாக கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி படகுகள், மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களின் 120 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். இவற்றில் 80 படகுகள் ராமேசுவரம் மீனவர்களுக்கு சொந்தமானவை.

படகுகளை மீட்கவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் மத்திய–மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இலங்கை வசம் உள்ள 120 படகுகளையும் மீட்கக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஏற்கனவே மனு செய்திருந்தேன். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள படகுகளை 2 மாதத்திற்குள் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இதுவரை படகுகள் மீட்கப்படவில்லை. எனவே மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர், மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடிப்பதற்கான காரணம் மற்றும் சர்வதேச எல்லை தொடர்பான விவரங்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.


Next Story