மர்மமான முறையில் இறப்பு: வாலிபரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மர்மமான முறையில் இறப்பு: வாலிபரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Nov 2018 10:45 PM GMT (Updated: 2018-11-21T02:13:57+05:30)

மர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

நெல்லை மாவட்டம் கூட்டப்புளி சுனாமி காலனியை சேர்ந்த டெரன்ஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கடந்த 6–ந்தேதி எனது மகன் கிறிஸ்டோபர்(வயது 20) கூட்டப்புளி கடற்கரை பகுதியில் நடந்து சென்றுள்ளான். அப்போது சிலர் அவனை கட்டையால் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவனை சிகிச்சைக்காக ராதாபுரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டான். கடந்த 11–ந்தேதி எனது மகனுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதன்பேரில் அவன் வெளியில் சென்றுள்ளான். மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அன்று இரவு 9 மணி அளவில் அவன் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பழவூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரகுபாலாஜி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் முருகன் உள்பட 12 பேர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர்கள் என்னை வாழவிடமாட்டார்கள் என்று அழுது கொண்டே கூறினான். இதுதொடர்பாக கொடுத்த புகாரை பழவூர் போலீசார் ஏற்க மறுத்து விட்டனர்.

இந்தநிலையில் மறுநாள்(12–ந்தேதி) காலை எனது மகன் கூட்டப்புளி அரசுப்பள்ளியில் தூக்கில் பிணமாக தொங்கினான். அவனது சாவுக்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரகுபாலாஜி உள்ளிட்டவர்கள் தான் காரணம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள எனது மகன் உடலை ஒன்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் மூலம் மறுபிரேத பரிசோதனை செய்யவும், அதை வீடியோவில் பதிவு செய்யவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும். எனது மகன் மர்மமான முறையில் இறந்த வழக்கை உள்ளூர் போலீசாரிடம் இருந்து வேறொரு அமைப்புக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரரின் மகன் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அது தொடர்பான அறிக்கையை வருகிற 26–ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story