சிறுசேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கியதற்கு கண்டனம்: பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்
சிறுசேரியில் போக்குவரத்து ஊழியர்களை சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கினர். இதையடுத்து மாநகர பஸ்களை இயக்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
திருப்போரூர்,
சென்னை திருவான்மியூரில் இருந்து காஞ்சீபுரம் மாவட்டம் சிறுசேரி நோக்கி நேற்று காலை அரசு பஸ் இயக்கப்பட்டது. டிரைவராக துரை, கண்டக்டராக மூர்த்தி இருந்தனர். பஸ் சிறுசேரி சிப்கோ தொழில்பேட்டை பஸ் நிறுத்தத்தை சென்றடைந்தபோது பஸ்சில் பயணம் செய்த புதுப்பாக்கம் அம்பேத்கர் சட்ட கல்லூரி 3–ம் ஆண்டு மாணவர் நவீன் அரவிந்த் பஸ் டிக்கெட் எடுப்பது தொடர்பாக கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் நவீன் அரவிந்த் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் 10–க்கும் மேற்பட்ட மாணவர்களை வரவழைத்து பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட மோதலில் சட்ட கல்லூரி மாணவர்கள் டிரைவர் துரை, கண்டக்டர் மூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது
தகராறை விலக்கி விட வந்த வேறு பஸ் கண்டக்டர்களான ரமேஷ், ஜகநாதன், நேரகாப்பாளர் ஏழுமலை மற்றும் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையறிந்த சக ஊழியர்கள் பஸ்களை இயக்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் பழைய மாமல்லபுரம் சாலை சிட்கோ தொழிபேட்டை அருகே பஸ்கள் ஆங்காங்கே நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் போராட்டத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் நேரில் சென்று போக்குவரது ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சட்டக்கல்லூரி மாணவரை கைது செய்து வழக்கு தொடருவதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் போராட்டத்தை கை விட்டனர்.
பஸ் டிரைவர் மூர்த்தி தங்களை தரக்குறைவாக பேசியதாக சட்டக்கல்லூரி மாணவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.