ஐகோர்ட்டு உத்தரவுப்படி அருப்புக்கோட்டையில் ஊருணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை; மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை


ஐகோர்ட்டு உத்தரவுப்படி அருப்புக்கோட்டையில் ஊருணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை; மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை
x
தினத்தந்தி 11 Jan 2019 10:45 PM GMT (Updated: 11 Jan 2019 10:45 PM GMT)

அருப்புக்கோட்டையில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த வன்னியர் ஊருணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும், அதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலை தொடர்கிறது.

விருதுநகர்,

அருப்புக்கோட்டையில் உள்ள வன்னியர் ஊருணி நீண்டகாலமாக பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஊருணியின் ஒரு பகுதியில் தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டு ஊருணி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்றொருபுறம் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதாலும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊருணியை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடக்கோரி இந்த ஊருணியை நிர்வகித்து வரும் அறக்கட்டளை நிர்வாகி முன்னாள் விமானப்படை அதிகாரி ஜனகராஜன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளையும், சீமைக்கருவேல மரங்களையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஐகோர்ட்டு விடுத்த காலக்கெடு கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் முடிந்து விட்டது. ஐகோர்ட்டு உத்தரவிட்டப்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் முன்னாள் விமானப்படை அதிகாரி ஜனகராஜன் மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சியின்போது கடந்த மாதம் ஐகோர்ட்டு உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்தார்.

இந்த மனு மீது மாவட்ட வருவாய் அதிகாரி நடவடிக்கை எடுப்பார் என ஒப்புகை சீட்டில் தெரிவித்து இருப்பதோடு, கடந்த மாதம் 26–ந்தேதிக்குள் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்கப்படும் என ஒப்புகை சீட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்காததோடு மாவட்ட நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்ட மனுவிற்கும் ஒப்புகை சீட்டில் தெரிவித்தப்படி குறிப்பிட்ட தேதிக்குள் மனுதாரருக்கு எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்த ஊருணியை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஐகோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை ஏன் என்று தெரியவில்லை.

இதுமாதிரியான நடைமுறை கோர்ட்டு அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்துவதோடு பொதுமக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழக்க செய்யும் நிலையும் ஏற்படுத்திவிடும். எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பிரச்சினை தொடர்பான வி‌ஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


Next Story