இலங்கையில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல் 7 பேரிடம் விசாரணை
சென்னை விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் இது தொடர்பாக 7 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னையை சேர்ந்த 3 பேரும், ராமநாதபுரத்தை சேர்ந்த 4 பேரும் திரும்பி வந்தனர்.
அந்த 7 பேர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 7 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதையடுத்து அவர்களின் உடைமைகளை சோதித்தபோது அதில் எதுவும் இல்லை.
பின்னர் 7 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள், உடலுக்குள் சிறு சிறு தங்க கட்டிகள், தங்க சங்கிலி ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மருத்துவர்கள் உதவியுடன் அவை வெளியே எடுக்கப்பட்டது.
அவர்களிடம் இருந்து ரூ.29 லட்சம் மதிப்புள்ள 870 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தங்க கடத்தலில் ஈடுப்பட்ட 7 பேரும் பணத்துக்காக குருவியாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி பிடிபட்ட 7 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.