செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போன்களை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள்
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போன்களை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என்பது உள்பட அடுக்கடுக்கான கேள்விகளை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எழுப்பி, மத்திய–மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
மதுரை,
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரிக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளாக மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள், அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலை விதியை மீறுவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விதியை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக கனரக வாகனங்களை நிறுத்துகின்றனர். அந்த வாகனங்கள் மீது பிற வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகின்றன. டிரைவர்களும் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.
சாலை விதி மீறலை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டுகளும் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளன. இவற்றை பின்பற்றி போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் நடவடிக்கை எடுப்பதில்லை.
எனவே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிச்செல்பவர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும். கோர்ட்டு வழிகாட்டுதல்களை ஊடகங்களில் பிரசாரம் செய்யவும், இதுதொடர்பாக சாலை சந்திப்புகளிலும், மதுபானக்கூடங்களிலும் டிஜிட்டல் போர்டுகள் வைக்கவும், 3 முறை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, போக்குவரத்து விதிமீறல் குறித்து புகார் தெரிவிப்பதற்காக அளிக்கப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. எப்போதும் ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டுள்ளது, என்று மனுதாரர் ஆஜராகி தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், அந்த செல்போன் எண் ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டு இருப்பது ஏன்? இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர், கடந்த 10 ஆண்டுகளில் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியவர்களால் தமிழகம் மற்றும் நாடு முழுவதும் ஏற்பட்ட விபத்துகள் எத்தனை?
அத்தகைய விபத்துகளில் சிக்கி இறந்தவர்கள் எவ்வளவு பேர்? காயம் அடைந்தவர்கள் எத்தனை பேர்? கடந்த 10 ஆண்டுகளில் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? இவர்களின் லைசென்சை குறிப்பிட்ட காலத்துக்கு அதிகாரிகள் தற்காலிகமாக ஏன் நிறுத்தி வைக்கக்கூடாது? வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்ற உணர்வை வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்தவும், அவர்களிடம் மாற்றத்தை கொண்டு வரவும் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?
இவர்கள் மீது மத்திய மோட்டார் வாகன விதி 21(25)–ன் கீழும், 1988–ம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 177–ன்படியும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வாகனம் ஓட்டியபடி செல்போனில் பேசினால், அவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என அடுக்கடுக்கான அதிரடி கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
இதுதொடர்பாக மத்திய–மாநில அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை 25–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.